திருப்பூர், ஜூன் 22 –
திருப்பூர் மாநகராட்சி ஊழியர்களாக தரம் உயர்த்தியும் அதற்குரிய ஊதியம் வழங்காத நிலையில் நியாயமான ஊதியம் நிர்ணயிக்கக் கோரி துப்புரவு மற்றும் குடிநீர் பணியாளர்கள் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் போராட்டத்தைக் கைவிடுமாறு அதிகாரிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

மாநகராட்சி ஊழியர்களாக தரம் உயர்த்தப்பட்டும் 223 பேருக்கு, தினக்கூலி பணியாளர்களை விடவும் மிகக்குறைந்த ஊதியம், அதாவது மாதம் ரூ. 2450 மட்டுமே வழங்கப்படுகிறது. பல கட்டப் போராட்டங்கள், மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து முறையிட்டும் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஊதியத்தை உயர்த்தி உத்தரவிடாமல் அரசு அலட்சியமாக உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் மாநகராட்சி அலுவலகம் முன்பாக காத்திருப்புப் போராட்டத்தை மேற்படி ஊழியர்கள் தொடங்கினர். இரவு, பகலாக அங்கேயே அவர்கள் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஊழியர்களின் ஊதியப் பிரச்சனை தொடர்பாக சட்டமன்ற மானியக் கோரிக்கையில் எழுப்புவதாக திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்தனர். எனினும் தீர்வு ஏற்படும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி துப்புரவு மற்றும் குடிநீர் பணியாளர்கள் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் காத்திருந்தனர்.

இதற்கிடையே மாநகராட்சி இளநிலைப் பொறியாளர்கள் அங்கு வந்து காத்திருக்கும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லாவிட்டால் காவல் துறை மூலம் கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டியதாக அந்த ஊழியர்கள் தெரிவித்தனர். கைது செய்து சிறைக்கு செல்வதற்கும் தயாராக இருப்பதாகவும், தங்கள் வாழ்க்கைப் பிரச்சனைக்கு நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் தெரிவித்தனர். அதிகாரிகள் மிரட்டல் விடுத்தாலும் போராட்டம் உறுதியாகத் தொடர்ந்து வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.