தீக்கதிர்

ஏற்றம் மட்டும் எட்டிப் பார்க்கவேயில்லை…

 ஏற்றங்களில் ஏறி நின்றும்

என் வாழ்வில் ஏற்றம் மட்டும்
எட்டிப் பார்க்கவேயில்லை…

உயர உயர மரம் வளர்த்தும்
என் வாழ்வில் உயர்வு மட்டும்
உயர்வாய் இருந்ததேயில்லை…

பசுமைகள் பல படைத்தும்
என் வாழ்வில் சுமையை தவிர
பசுமையை பார்த்ததேயில்லை…

எதையும் குறையில்லாமல் நான் படைத்தும்
என்னை மட்டும் படைத்துவிட்டான்
எல்லாம் குறையாய்..

“உயர உயர பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகாது”
என்பது பலித்துக் கொண்டிருக்கிறது.

எவ்வளவுதான் உழைத்தாலும்
ஏழையாகவே இருக்கும்
என் வாழ்வில்…!

ஒருவேளை கஞ்சிக்கு நான் ஓடுகிறேன்..
ஒரு சுற்றுடம்பை குறைக்க அவன் ஓடுகிறான்..

விளைத்தவன் நானிருக்க…
விலை சொல்ல அவன் யார்..?

கால்கள் ஆடி திரிந்த என் நிலத்தை
கால் அடி மனையாய் கூறுபோட அவன் யார்..?

பயிர் செய்ய நிலமில்லை-எனக்கு
உயிரோடு இருக்க மனமில்லை

வெட்டிப்போட்ட என் நிலங்களைக் கண்டு
வேதனையில் வெட்டி சாகிறேன்..

கட்டிப்போட்ட கைகளை கண்டு
தட்டி கேட்க யாராவது வருவீர்கள் என்று…

நான்
விதைத்த விதைகள்
மண்ணிலும் மனதிலும் வளர
உயிரை உரமாக்கி உறங்குகிறேன்..
உறங்காத நினைவுகளுடன்……..

-ஏழை விவசாயி

Govindaraj Ramaswamy