ஈரோடு, ஜூன் 21-
பொதுக்கழிப்பிடம் கட்ட தேர்ந்தெடுத்த இடத்தில் விநாயகர் சிலையை வைத்து மோதலை ஏற்படுத்த திட்டமிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தலித் மக்கள் முற்றுகையிட்டனர். கோபி அருகே உள்ள பெருந்தலையூரை அடுத்த மெருகு குட்டிபாளையத்தைச் சேர்ந்த தலித் மக்கள் 200க்கும் மேற்பட்டோர் புதனன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டுவந்தனர்.

இதன்பின் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதி மக்கள் பயன்படுத்துவதற்கு பொதுக்கழிப்பிடம் இல்லை. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பலரிடம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தோம். இதைத்தொடர்ந்து கழிப்பிடம் கட்டுவதற்கு ஒரு இடம் தேர்வு செய்து சில தினங்களுக்கு முன்பு அதற்கான பணிகளை துவங்கினோம். இந்நிலையில் அந்த இடத்தில் ஒரு தரப்பினர் திட்டமிட்டு, இரு தரப்பினருக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தும் விதத்தில் விநாயகர் சிலையை வைத்துள்ளனர். இதனால் அந்த இடத்தை பொதுக்கழிப்பிடத்திற்கு பயன்
படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இரு தரப்பினருக்கு இடையே திட்டமிட்டு மோதலை ஏற்படுத்தும் விதத்தில்வைக்கப்பட்டுள்ள விநாயகர் நிலையை அகற்றி, அவ்விடத்தில் பொதுக்கழிப்பிடம் அமைத்து தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறினர். இதையடுத்து வட்டாட்சியர் ஜெயக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சீனிவாசன், கோபி வட்டார வளர்ச்சி இயக்குனர் ராஜலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுக்கழிப்பிடம் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: