சென்னை,
சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் 42 மாணவர்கள் தேர்ச்சி பெறாதது தொடர்பாக மனித வள மேம்பாட்டு துறையும், சிபிஎஸ்இ-யும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆதித்யா ஏகன் என்ற மாணவரின் தந்தை சந்தோஷ் குமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது மகன் மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள  கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் படித்து வருகிறான். 2016-2017 கல்வியாண்டில் அவன் ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு செல்ல வேண்டும். ஆனால் எனது மகன் உட்பட 42 மாணவர்கள் மீண்டும் ஒன்பதாம் வகுப்பு  படிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த செயல் மூலம் எனது மகனுக்கு  மன உளச்சலையும், மன அழுத்தத்தையும் பள்ளி  நிர்வாகம் கொடுத்துள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 2009ஆம் ஆண்டு முதல்  தொடர் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பீடு   திட்டத்தின் படி மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அதன்படி 12ஆம் வகுப்பை முடிக்கும்  போது மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆனால் தற்போது 42 மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. இது பள்ளி நிர்வாகம், பயிற்சி முறையின் தோல்வியைத் தான் காட்டுகிறது.

இந்த 42 மாணவர்கள் தங்களை மீண்டும் நிருபிக்க ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். ஏனென்றால் இது மாணவர்களின் வாழ்க்கை பிரச்சனை.  இவர்களுக்கு பொது இடத்தில் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ சென்னை மண்டல இணை இயக்குனருக்கும், சிபிஎஸ்இ தலைவருக்கும் உத்தரவிட வேண்டும்.  அதன் படி அவர்களின் ஒன்பதாம் வகுப்பு தேர்வு முடிகளை வெளியிட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, சிபிஎஸ்இ தலைவர், சிபிஎஸ்இ சென்னை மண்டல இயக்குனர், பள்ளி முதல்வர் ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டார்.

Leave A Reply