கோவை, ஜூன் 20-
கோவை நரசிம்மபதி குளத்தில் வண்டல் மண் எடுக்க விதித்த தடையை நீக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.பி.இளங்கோவன் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நரசிம்மபதி குளத்தில் விவசாயிகள் விவசாயத்திற்காக வண்டல் மண் எடுத்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையே விவசாயிகளின் போர்வையில் சிலர் செங்கல் சூளைக்கு மண் எடுப்பதாக வந்த புகாரை தொடர்ந்து குளத்தில் மண் எடுப்பதை மாவட்ட நிர்வாகம் முழுமையாக தடை செய்துவிட்டது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விவசாயிகள் மண் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்து, அவற்றை முறைபடுத்த வேண்டும். மேலும் குளத்தின் கரையையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அம்மனுவில் கூறியுள்ளார்.

இதேபோல், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் மண்சட்டியுடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில் கோவை மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை, பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகள் என குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு குளங்கள், ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் விடுபட்டுள்ளது. அப்பகுதிகளிலும் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply