கோவை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில், எட்டு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியவர், சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன். இவர் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து, இவர் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன்கவுல் உள்பட பல நீதிபதிகள் ஊழல் செய்வதாக, 2015 ஆம் ஆண்டு பிரதமருக்குக் கடிதம் எழுதினார். இவரின் இந்தச் செயல்பாடு, நீதிமன்றத்தை அவமதிப்பதாக உச்சநீதிமன்றம் கருதியது. எனவே, உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து கர்ணன்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. அவரை நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குக் கர்ணன் முழுமையாக ஒத்துழைக்காத நிலையில், நீதிபதி கர்ணனின் மனநலம்குறித்து, கொல்கத்தா அரசு மருத்துவர்கள் பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் மனநலப் பரிசோதனைக்குக் கர்ணன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி, நீதிபதி கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். அந்த மனுவில், ‘பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்குச் சில காலங்களே உள்ளதால், கைது உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டதால், மேல்முறையீட்டுக்கு வாய்ப்பில்லை என்று கூறி, மனுவை நீதிபதிகள் தள்ளுபடிசெய்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவை ரத்து செய்யுமாறு நீதிபதி கர்ணன் சார்பில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 1 மாதத்திற்கும் மேல் தலைமறைவாக இருந்து வந்த நீதிபதி கர்ணன் கோவையில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் கோவை வந்த மேற்கு வங்க காவல்துறையினர் தமிழக காவல்துறையின் உதவியுடன் கோவை மலூமிச்சம்பட்டி பகுதியில் உள்ள கோல்டன் சொகுசு விடுதியில்  மறைந்திருந்த கர்ணனை செவ்வாயன்று கைது செய்துள்ளனர். பின்னர் இவரை விமானம் மூலம் மேற்கு வங்க மாநிலத்திற்கு கொண்டு செல்ல காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply