சென்னை,
மத்திய அரசின் மாட்றிச்சி தடை ஆணை தொடர்பாக அதிமுக அரசின் தெளிவற்ற நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் கூட்டணிக் கட்சிகள் செவ்வாயன்று சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்தது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளத.

தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை(ஜூன்20) கேள்வி நேரம் முடிந்ததும் இறைச்சிக்கான வணிகத்துக்கு கால்நடைக்கு தடைவித்து  மத்திய அரசு கொண்டுவந்துள்ள அறிக்கையை எதிர்த்து தனித் தீர்மானம் கொண்டு வரவேண்டியதன் அவசியம் குறித்து  விவாதிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதற்கு பேரவைத் தலைவர் ப.தனபால் அனுமதி அளித்தார்.

மு.க.ஸ்டாலின்:                                                                                                                                          அரசியல் சாசனம் வழங்கியுள்ளதற்கு எதிராக தனி மனித உரிமைகளை பறிப்பதாகவும் மத சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் கொடுமையான சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. பாஜக கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், தமிழக முதலமைச்சர் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மவுனம் சாதிப்பது வேதனையளிக்கிறது. கேரளா,புதுச்சேரி, மேகாலயா போன்று தமிழ்நாட்டிலும் சிறப்பு தனித் தீர்மானம் கொண்டு வரவேண்டும்.

இராமசாமி(காங்கிரஸ்):                                                                                                                        என்ன உணவு உண்ண வேண்டும் என்பது தனிநபர் உரிமை. அந்த உரிமையை பாதிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு உள்நோக்கத்துடன் கொண்டு வந்திருக்கும் இந்த தடை சட்டத்திற்கு தமிழக அரசு துணைபோகக்கூடாது. மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரவேண்டும்.

அபுபக்கர்(முஸ்லீம் லீக்):                                                                                                                   மத்திய அரசின் தடை சட்டத்தை மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளதா அல்லது எதிர்க்கிறதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
தமீமுன்அன்சாரி(மனித நேய ஜனநாயக கட்சி): இந்திய நாடு பல்வேறு மதங்களைக் கொண்ட ஒரு கதம்ப மாலை. அதில், ஒற்றைச் சாளர கலாச்சாரத்தை திணிக்க யார் முயற்சி செய்தாலும் மக்கள் முறியடிப்பார்கள். இந்தியாதான் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதல் இடத்தில் உள்ளது. மாட்டு இறைச்சி விற்பனைக்கு பாஜக அரசு தடை விதித்திருப்பது மறைமுக சதித் திட்டமாக உள்ளது.

தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை):                                                                                                மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசாங்கம் தமிழக வாழ்வியல் சூழ்நிலைக்கு வேட்டு வைத்துள்ளது. மரபு ரீதியான உணவுப் பழக்கத்தை தடை செய்துள்ளது. கால்நடை வியாபாரத்தை முற்றிலும் அழித்துள்ளது. மத்திய அரசின் நிலைபாட்டை மாநில அரசு எதிர்க்க வேண்டும். கால்நடை சந்தை கட்டுப்பாட்டுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். (முக்குலத்தோர் புலிப்படைகள் கட்சியின் தலைவர் கருணாஸ் பேச அனுமதிகோரினார். ஆனால், பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை)

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “பெரும்பான்மையான மக்களின் விருப்பப்படி தமிழக அரசின் நிலைபாடு இருக்கும். தமிழகத்தில் பசுவதை தடுப்பு சட்டம் 40 ஆண்டுகளாக அமலில் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு தமிழக அரசின் நிலைபாடு தெரிவிக்கப்படும்”  என்றார்.

முதலமைச்சரின் பதிலை ஏற்க மறுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. ஆளும் அதிமுக உறுப்பினர்களாக உள்ள தோழமைக் கட்சித் தலைவர்களான தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோரும் முதலமைச்சரின் பதிலுக்கு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளி நடப்பு செய்தனர்.

Leave A Reply