மேட்டுப்பாளையம், ஜூன் 20-
பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் தண்ணீர் அருந்த வந்த போது உடல் சோர்வால் மயங்கி சரிந்த காட்டு யானைக்கு வனத்துறை மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் தண்ணீர் அருந்த வந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானையொன்று உடல் சோர்வு காரணமாக அங்கேயே மயங்கி சரிந்தது. கீழே விழுந்த யானை மீண்டும் எழுந்திருக்க இயலாமல் தவிப்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சிறுமுகை வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் யானையின் உடலை பரிசோதித்தனர். பின்னர் யானைக்கு பிடித்தமான வாழை, கரும்பு போன்ற உணவுகளை வழங்கியதோடு அதன் உடல் சோர்வு நீங்கவும் தேவையான சத்துக்களை பெறவும் குளுக்கோஸ் மற்றும் விட்டமின் சத்து மருந்துகளை ஊசி மூலம் யானையின் உடலில் செலுத்தி சிகிச்சையளித்தனர். மேலும் வெயிலின் தாக்கம் யானையின் மீது விழாத வகையில் கூடாரமும் அமைத்தனர்.

ஆனாலும்யானையால் எழுந்து நிற்க இயலாமல் படுத்தபடியே உள்ளது. வயது முதிர்வு காரணமாக சோர்வுற்று கிடக்கும் இந்த யானைக்கு சிகிச்சையும் கண்காணிப்பும் தொடரும் எனவும், விரைவில் யானை எழுந்து மீண்டும் காட்டுக்குள் செல்ல வாய்ப்புள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே, கடந்த மூன்றாண்டுகளாகவே கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை வனச்சரக பகுதிகளில் போதிய அளவில் மழைப்பொழிவு இல்லை. இதனால் காடுகளில் வறட்சி ஏற்பட்டு யானை போன்ற மிகப்பெரிய வன உயிரினங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் போதிய தீவனமின்றி தாகம் தீர்க்க நீண்ட தொலைவு பயணித்து அணையின் நீர்தேக்க பகுதிக்கு வரும் யானைகளில் சில இது போல சோர்வுற்று விழுந்து விடுகின்றன. ஆகவே, வனப்பகுதியில் ஆங்காங்கே யானைகளுக்கு தண்ணீர் கிடைக்கவனத்துறை போதிய கவனம் செலுத்த வேண்டும் என்று வனஉயிரின ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

free wordpress themes

Leave A Reply