நவம்பர் மாத ரபி பருவத்தில் விவசாயம் ஆரம்பிக்கும் நிலையில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பானது உற்பத்தியைப் பாதிக்கும் என்று நான் உட்பட பலரும் எண்ணினோம். ஆனால் நாங்கள் நினைத்தது தவறு என்பதை நிரூபிக்கும் வகையில், தொடர் வறட்சிக்குப் பிறகு முளைப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் சரியான நேரத்தில் விடிந்த குளிர்காலம், நல்ல பருவ மழை ஆகியவை எல்லாம் சேர்ந்து பிச்சை எடுத்தோ அல்லது கடன் வாங்கியோ விவசாயிகளைத் தங்களது நிலங்களில் விதைப்பு பணியைத் துவங்க வைத்தன. ரொக்கப் பணம் இல்லை என்பதால், சிறிது காலம் கழித்து பணம் தருவதாகக் கூறி வேலையாட்களை அமர்த்துதல், விதை, உரம், பூச்சிமருந்து வாங்குதல் போன்றவற்றின் மூலம் பணமதிப்பிழப்பு ஏற்படுத்தியிருந்த சூறாவளியை விவசாயிகள் எதிர்கொண்டனர். முறைசாராக் கடன் தருகின்ற அமைப்புகள்,  சமூக மூலதனம் ஆகியவை அதிகப்படியான விளைச்சலை உறுதிப்படுத்துவதாக இருந்தன.
ஆனால் விளைபொருட்கள் விற்பனைக்கு வந்த போதுதான் பணமதிப்பிழப்பு தனது கோரமுகத்தைக் காட்டியது. உத்தரப்பிரதேச மாநிலம் ஃபருக்காபாத்தில் கடந்த ஆண்டு குவிண்டால் 600 ரூபாய்க்கு மேல் விற்பனையான உருளைக்கிழங்கு இந்த பிப்ரவரியில் 350 ரூபாய்க்கு கூட விற்பனையாகவில்லை. 2016 மே மாதத்தின் நடுவில் உச்சபட்ச விலையாக குவிண்டாலுக்கு 1100 ரூபாய் வரை விற்பனையான நிலைமை மாறி இப்போது 350 ரூபாயிலிருந்து 400 வரையே விலை போனது.

மகாராஷ்ட்ர மாநிலம் லாசல்கான் பகுதி வெங்காயத்திற்கும் இதே நிலைமைதான் ஏற்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் சராசரியாக குவிண்டால் ஒன்றுக்கு 750-800 ரூபாய் என்றிருந்த நிலைமை மாறி இப்போது 450 ரூபாய் என்பதாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இதே மதத்தில் 1200 ரூபாய் வரையிலும் விற்பனையானதும் உண்டு. கர்நாடகா மாநிலம் கோலாரில் கடந்த ஆண்டு குவிண்டால் 1500 முதல் 1600 ரூபாய் வரை விற்பனையான தக்காளி, இந்த ஆண்டு மே மாத துவக்கத்தில் 300 முதல் 400 ரூபாய் வரையிலேயே விற்பனையானது.
உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி என்று இந்த மூன்று பொருட்களும் மொத்த விற்பனை மையங்களில் கிலோ ஐந்து ரூபாய்க்கு குறைவாகவும், சில்லரைக் கடைகளில் கிலோ இருபது ரூபாய்க்கும் குறைவாக இதற்கு முன்பாக எப்போதாவது விற்பனையானது பற்றி நமக்குத் தெரியுமா? அதுவும் விலை உச்சகட்டத்தில் இருக்கும் கோடைப் பருவத்தில் இத்தகைய வீழ்ச்சியைக் கேள்விப்பட்டிருக்கிறோமா?  மற்ற விவசாயப் பொருள்களுக்கும் இந்த விலைவீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.  மத்தியப்பிரதேச மாநிலம் மாண்ட்சோரில் பூண்டு, வெந்தயம் ஆகியவற்றின் விலை  கடந்த ஆண்டு 4700 முதல் 4800 வரை விலை என்றிருந்தது மாறி இந்த ஆண்டு 3100 முதல் 3200 வரை மட்டும் என்றாகி விட்டது. நாசிக் விவசாயிகள் தங்களது சோனகா விதையில்லா திராட்சைப் பழங்களை கிலோ 12 ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். கடந்த ஆண்டு அவர்களுக்கு 45 ரூபாய் வரையிலும் விலை கிடைத்தது.
கரீப் பருவப் பயிரான சோயாபீன்ஸிற்கும் இதே கதிதான் ஏற்பட்டது. இந்தூரில் நவம்பர் மாதம் அறுவடையின் போது 2800 முதல் 2900 ரூபாய் வரையிலும் விலைபோனதற்குப் பின்பு, புதிய பருவத்திற்கான விதைப்பு ஆரம்பித்த பிறகும் கூட விலை அப்படியே நின்று போனது.

கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் 4300 முதல் 4500 ரூபாய் வரை விலை போன துவரம் பருப்புக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. அரசின் குறைந்தபட்ச விற்பனை விலையான 5050 ரூபாயை விடக் குறைவாக இந்த விலை இருந்த நிலையில், அது மேலும் சரிந்து 3700 முதல் 3800 ரூபாய் வரை என்றாகிப் போனது. இவ்வாறான நிலையில் சோயாபீன்ஸையோ, துவரையையோ எந்த விவசாயியாவது விளைவிக்க முன்வருவாரா?

இத்தகைய மிகக் குறைந்த விலை என்பது ஓரிரு பொருட்களோடு நின்று போன விஷயமாகத் தெரியவில்லை. இந்த விலை வீழ்ச்சி என்பது அவ்வப்போது முசாபர்நகர், சாங்லியிலிருக்கும் கரும்பு விவசாயி, நாமக்கல்லில் இருக்கும் முட்டை உற்பத்தியாளர் ஆகியோரை மட்டும் பாதிக்கும் சர்க்கரை, முட்டை விலை வீழ்ச்சி போன்றதாக இருக்கவில்லை. பொதுவாக அனைத்து விவசாயப் பொருட்களின் விலையும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. விவசாய உற்பத்தியானது குறையும் நிலையை நோக்கி பணமதிப்பிழப்பு நம்மை நகர்த்தியுள்ளது.
எவ்வாறு?

இந்தியாவில் பெரும்பான்மையான உற்பத்தி வியாபாரம் என்பது ரொக்கப்பணம் மற்றும் நிதி மூலமாக தொடர் சங்கிலியாக அமைந்திருக்கும் சிறிய சந்தைகள், உற்பத்திக்குத் தேவையான பொருட்களைத் தருபவர்கள், சில்லரை வியாபாரிகள் ஆகியோர் மூலமாகவே  நடைபெறுகிறது. இந்தப் பாரம்பரிய விவசாய-வியாபார மூலதனம் என்பது பணமதிப்பிழப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தைகளின் பணப்பரிமாற்றத்தினை இது தாக்கியிருக்கிறது. விலை குறைந்திருக்கும் போது வாங்கி சேகரித்து வைத்து, பின்னர் விற்பனை செய்வது என்கிற வியாபாரம் இனி நடப்பதற்கான சாத்தியமில்லை. அதற்குத் தேவையான ரொக்கப் பணமோ அல்லது நம்பிக்கையோ இப்போது இல்லை.

உற்பத்திச் சந்தைக்குத் தேவையான பணம் இல்லாமல் போய் விட்டது. பத்து சதவீத உற்பத்திக் குறைவு என்பது 200 சதவீதம் விலை உயர்வுக்கு காரணாமாக இருப்பதால், இத்தகைய  ஊகவணிகம் பணவீக்கத்திற்கு காரணமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் இப்போது நடப்பது வேறு மாதிரியாக இருக்கிறது. பத்து சதவீதம் அதிக உற்பத்தியானது 200 சதவீதம் விற்பனை விலையை வீழ்ச்சியடைய வைக்கிறது. 

ரொக்கப்பணத்தை நம்பியிருக்கும் பாரம்பரிய விவசாய-வியாபார மூலதனத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு முறைசார்ந்த நிதி, வங்கிகள், பொருள் விற்பனை நிலையங்கள், முறைசார்ந்த சில்லரை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது எவருக்கும் தெரியாது. ஆனால் பழைய நிலைமை திரும்பும் வரையிலும் பாதிக்கப்படுவது என்னவோ விவசாயிகள்தான். அதற்குச் சாட்சியாக சந்தை விலைகளும், காய்ந்து கிடக்கும் வெற்று நிலங்களும் இருக்கின்றன.
பணமதிப்பிழப்பினால் ஏற்பட்டிருக்கும் இந்த பாதிப்புகள் தற்காலிகமானவை என்று எடுத்துக் கொண்டாலும்,’பணவீக்க மதிப்பிலக்கு’ என்பது அடுத்ததாக நம் முன்னே நிற்கிறது. நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் இணைந்து 2015 பிப்ரவரியில், ரிசர்வ் வங்கியானது நுகர்வோர் விலைக் குறியீட்டின் வீக்கத்திற்கான மதிப்பிலக்காக 4 சதவீதம் என்பதை அடைவதைக் கொண்டிருக்க வேண்டும் என்று பணம் சார்ந்த கொள்கைகளுக்கான கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.  இத்தகைய பணவீக்க மதிப்பிலக்கு 29 நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த மதிப்பிலக்கில்  உணவு மற்றும் ஆல்கஹால் இல்லாத பானங்கள் ஆகியவற்றின் பங்கினைப் பொறுத்த வரையில் இந்தியா தனித்தன்மையோடு விளங்குகிறது. நுகர்வோர் விலைக் குறியீட்டில் உணவு, ஆல்கஹால் இல்லாத பானங்கள் ஆகியவற்றின் பங்கு இந்தியாவில் 45.86 சதமாக இருக்கும் வேளையில்,   நியூஸிலாந்தில் 18.84 சதவீதமாகவும், கனடாவில் 16.41 சதவீதமாகவும், ஐக்கியப் பேரரசில் 10.30 சதவீதமாகவும் மட்டுமே இருக்கிறது.

இந்தியா தனது நுகர்வோர் விலைக் குறியீட்டில் விவசாயப் பொருட்களுக்கு அதிக பங்கினைக் கொடுத்திருப்பதால், பணவீக்க மதிப்பிலக்கின் வெற்றி என்பது உணவுப் பொருள்களின் விலையைப் பொறுத்ததாகவே இருக்கிறது. இந்த பணவீக்கமானது மொத்த வியாபாரத்தை தவிர்த்து சில்லரை வணிகத்தை இலக்காகக் கொண்டிருப்பதால், விவசாயப் பொருட்களின் விலையினைக் குறைப்பதையே உள்நோக்கமாகக் கொண்டிருக்கும்.

அதனால்தான் நமது கொள்கை வடிவமைப்பாளகள் உற்பத்தி அதலபாதாளத்திற்குச் செல்லும் போது வேறெதுவும் செய்யாமல், விலை உயரப் போவதற்கான அறிகுறி தெரியும் போதே இருப்பு வைப்பது, விளை பொருட்களை ஏற்றுமதி செய்வது ஆகியவற்றின் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதுடன், வரியில்லாத இறக்குமதியினை அனுமதிப்பது போன்றவற்றை செய்து விடுகிறார்கள்.
பணவீக்கம் என்பது பொருட்கள், சேவைகள் ஆகியவற்றின் விலை உயர்வது, வீழ்ச்சியடைவது குறித்தது அல்ல. அது யாருடைய மதிப்பு உயர்கிறது அல்லது குறைகிறது என்பதைப் பற்றியது. அதாவது வெற்றியடைபவர்களையும், தோல்வியடைபவர்களையும் பற்றியது. இன்றைய பணத் தளர்வான சூழலில், மிகத் தெளிவாக விவசாயிகள்தான் இதில் தோல்வியடைந்திருப்பவர்கள்.

நன்றி : http://indianexpress.com/article/opinion/columns/the-crops-of-wrath-demonetisation-4699598/

The crops of wrath

தமிழில்: முனைவர் த.சந்திரகுரு, விருதுநகர்.

Leave A Reply

%d bloggers like this: