ஈரோடு, ஜூன் 20-
சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் இயங்கி வரும் மதுக்கடையை அகற்றக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். சத்தியமங்கலம் வட்டம், அரியப்பம்பாளையம் பேரூராட்சி பகுதி எல்லைக்குட்பட்ட நேரு நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி மட்டும் உழவர் சந்தை அமைந்துள்ளது. அதன் பின்புறத்தில் ஒரு மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த மதுக்கடையை சுற்றி பள்ளி, கோவில், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. மேலும், பேருந்து நிறுத்தம் என்பதால் பெண்கள் அங்கு அதிகமாக சென்று வருகிறார்கள்.

அதேநேரம், இங்கு மதுக்கடை அமைந்திருப்பதன் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே, இந்த மதுக்கடையை அகற்றக்கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது, கடையை மூடும் உத்தரவு மாவட்ட ஆட்சியரிடம் உள்ளது என டாஸ்மாக் அதிகாரிகள் கூறினார்கள். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பொதுமக்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். எனவே, மதுக்கடையை அகற்றுவதுடன், போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Leave A Reply