கோவை, ஜூன் 20-
பொய்வழக்கு போடப்பட்டதைக் கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் திங்களன்று நடைபெற்றது. அப்போது மனு அளிக்க வந்த அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காவல்துறையினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்து சென்றனர்.

அம்மனுவில், கோவை சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட்களை சந்தித்த ரசீத், ஹரிஹர சர்மா ஆகியோர் மாவோயிஸ்ட்களிடம் பென்டிரைவ் கொடுத்ததாக கூறி பொய்வழக்கு போட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply