சென்னை,
புதுச்சேரி காவலரை பணியிடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1998ம் ஆண்டு புதுச்சேரி  காவல்துறையில் காவலராக பணியைத் தொடங்கியவர் சண்முகம். பின்பு இவர் சிறப்பு அதிரடிப்படையில் சேர்ந்தார். பல்வேறு வழக்குகளை விசாரித்து  திறம்பட செயலாற்றியதற்காக இவருக்கு 2016 ஆம் ஆண்டு ராஜிவ்காந்தி விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவ விடுப்பில் சென்றார்.அந்நேரத்தில்  விபச்சாரம் மற்றும் லாட்டரி வழக்குகளில் சண்முகத்துக்கு தொடர்பு இருப்பதாக  ஒரு பத்திரிகைச் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து  அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு  பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி  சண்முகம்  வழக்கு தொடர்ந்தார். அதில் “சில உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரித்து உண்மை நிலையைக் கொண்டு வந்ததால், என்னை திட்டமிட்டு பணி நீக்கம் செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிமகாதேவன்,  “19 ஆண்டுகளாக காவல்துறைப் பணியில் இருந்துள்ள சண்முகத்துக்கு  தன் தரப்பு விளக்கத்தை எடுத்து வைக்க  எந்த வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. இவரைப் போன்று பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிகாரிகள் மீது இதுவரை  நடவடிக்கை எடுக்காமல்,இவர் மீது மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுத்தது பாரபட்சமானது” எனக்கூறி சண்முகத்தின்  பணி நீக்க ஆணையை ரத்துச் செய்து உத்தரவிட்டார். அவரை உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்கவும்  உத்தரவிட்டார்.

Leave A Reply