சென்னை,
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி விவகாரம் குறித்து கேள்வி நேரத்தில் விதிகளுக்கு முரணாக பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது.

ஆலங்குடி தொகுதி உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி திமுக கொண்டு வந்ததாக கூறினார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், திமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது. அடிக்கல் நாட்டவில்லை. நிதி ஒதுக்கவில்லை. அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாதான் 110விதியின கீழ் அறிவித்து, அரசாணைவெளியிட்டு, நிதி ஒதுக்கினார் என்று கூறினார்.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்து திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றதாக கூறினார். மேலும், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரை தொலைபேசியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்துள்ளார். நிகழ்ச்சிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த 3 எம்எல்ஏக்களையும் போலீசார் கைது செய்தது எதற்காக ? என்று கேட்டார். அதற்கு விளக்கமளித்த அமைச்சர், நிகழ்ச்சிக்கு வரும் முதலமைச்சருக்கு கருப்புகொடி காட்ட திட்டமிட்டிருப்பதாக தகவல்  கிடைத்தது. அதனடிப்படையில் காவல்துறையினர் கைது செய்தனர் என்றார்.

இதனை மறுத்த ஸ்டாலின், நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என்றால் கருப்பு கொடி காட்ட கூறியிருந்தோம். நிகழ்ச்சிக்கு அழைத்த பிறகு எதற்காக கருப்பு கொடி காட்டப்போகிறோம். திமுக உறுப்பினர்கள் பங்கேற்றால் அடிக்கல் நாட்டு விழா விவகாரம் உள்ளிட்டவைகளை எழுப்புவார்கள் என்பதால் திட்டமிட்டு கைது செய்துள்ளீர்கள் என்றார்.

இதற்கு விளக்கம் அளிக்க முற்பட்ட அமைச்சருக்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார். விதிகளுக்கு முரணாக கேள்வி நேரத்தில் விவாதம் நடந்து விட்டது. இனிமேல் இதுபோன்று நடக்கக்கூடாது என்றார்.

Leave A Reply