சென்னை,
கோவையில் பாலியல் புகாருக்கு உள்ளான வாய்பேசாதோர் பள்ளி மூடப்பட்டு குழந்தைகளை வீட்டுக்கு அனுப்ப அரசு முயற்சிப்பதை நிறுத்தி பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, துணைத் தலைவர் தே.லட்சுமணன், செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் முதலமைச்சருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், செம்மாண்டம்பாளையம் கிராமம், கோதபாளையத்தில் திருப்பூர் காதுகேளாதோர் சிறப்பு பள்ளி (6 முதல் 12-ம் வகுப்பு வரை) செயல்பட்டு வந்தது. 100-க்கும் மேலான மாற்றுத்திறனாளி குழந்தைகள் இப்பள்ளியில் தங்கி கல்வி பயின்று வந்துள்ளனர்.
இப்பள்ளியின் தாளாளர் முருகசாமி (வாய்பேசாதவர்) பல மாற்றுத்திறனாளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் துன்புறுத்தல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் சமீபத்தில் வெளிவந்தன.  பாதிக்கப்பட்ட சில மாணவிகள் புகார் கொடுத்ததன் அடிப்படையில், கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் 9.5.2017 அன்று வழக்கு (207/2017) பதிவு செய்து, முருகசாமி, சித்ராதேவி, ரேவதி, பாபு, பிரமிளா  ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளதாக தெரிகிறது.

குற்றவாளிகள் வெளியே வந்து பள்ளி நிர்வாகத்தை நடத்த முயற்சிப்பது ஆபத்தானது என்பதால், விசாரணை முடியும் வரை அவர்களது ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும், மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அரசே பள்ளியை பொறுப்பேற்று தொடர்ந்து நடத்த வேண்டும், சிபிசிஐடி விசாரணை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்து  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் அளித்த விசாரணை அறிக்கை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளின் மாநில ஆணையர் உத்தரவிட்டு, அப்பள்ளி மூடி சீல் வைக்கப்பட்டிருப்பது மேலும் சிக்கலை உண்டாக்கியுள்ளது.  . மாணவ-மாணவிகளின் மாற்றுச்சான்றுகளை பெற்று, வேறு பள்ளிகளில் சேர்க்க குழந்தைகளின் பெற்றோர்கள் வற்புறுத்தப்படுவதாகவும் அதே வேளையில் தற்போதைய பள்ளி நிர்வாகம் மாற்றுச் சான்று தர மறுப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

100-க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகளை ஒரே நேரத்தில் மாற்றுச் சான்று வாங்க வற்புறுத்துவது அக்குழந்தைகளின் கல்வியை பாதிக்கச் செய்யும் நடவடிக்கையாகும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போதிய முன்னேற்பாடு மற்றும் உரிய வசதிகள் இல்லாமல்  வேறு சிறப்புப் பள்ளிகளில் இத்தனை பேரை திடீரென தங்க வைத்து தரமான கல்வியை அளிப்பது சாத்தியமல்ல.

எனவே, அரசே தன் நிர்வாகத்தின்கீழ் இப்பள்ளியைக் கொண்டுவந்து, அதே இடத்தில் அப்பள்ளியை தொடர்ந்து நடத்த உரிய உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாங்கள் பிறப்பிக்கவும், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வியை உறுதி செய்யவும் சங்கம் வலியுறுத்திக் கோருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply