சேலம். ஜீன் 20-
நூறு நாள் வேலை திட்டத்தை அனைத்து பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்திட கோரி அகில இந்திய விவிசாய தொழிலாளர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் செவ்வாயன்று ஈடுபட்டனர். ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றதால் ஆட்சியர் அலுவலக பகுதி மக்கள் வெள்ளத்தால் கடல் போல் காட்சியளித்தது.

கிராம பஞ்சாயத்துகளில் வேலை வழங்குவது போன்று பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நிறைவேற்றிட வலியுறுத்தி, இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட பெண்கள் சங்கத்தின் மாநில தலைவர் எ.லாசர் தலைமையில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். இதில் தற்போது தமிழக சட்டமன்றத்தில் நூறு நாள் வேலை திட்டம் பேருராட்சி பகுதிகளுக்கு விரிவுப்படுத்துதல் குறித்து தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்றும், அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கையிட்டனர்.  ஏற்கனவே விவசாயம் பொய்த்து போன நிலையில், கடும் வறட்சியால் வேலையின்றி தவித்து வரும் மக்களுக்கு உரிய வேலை வாய்ப்பை உருவாக்கும் விதத்தில், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் இந்த ஆர்பாட்டத்தில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கை குழந்தைகளுடன் பெண்கள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

போராட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் லாசர் கூறும் போது , தமிழகத்தில் 528 பேருராட்சிகள் உள்ளன. அதில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் விவசாயத்தையும் அதனை சார்ந்த தொழிலையும் செய்தி வருகின்னறனர். ஆனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத சூழல் நிலவிவருகிறது. தமிழகம் முழுவதும் பேரூராட்சிகளில் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருவதாகவும், அர்களுக்கு நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை வழங்கிட வேண்டும் என்று பல முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், தரிபுரா மாநிலத்தில் மாநிலத்தின் சொந்த நிதியில் இருந்து இத்திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இது குறித்து தமிழக சட்டமன்றத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்றும், மத்திய அரசு இதற்கான நிதியை ஒதுக்கிடு செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்டமாக தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.கே.வெங்கடாச்சலம், செயலாளர் ஜி.கணபதி, மாவட்ட துணை தலைவர் எ.ராம மூர்த்தி, மாவட்ட பொருளாளர் பி.மாதேஸ்வரன், சின்ராஜ், செல்வமேரி ஆகியோர் பங்கேற்றனர். சிபிஎம் மாவட்டசெயலாளர் பி.தங்கவேலு, மாநில குழு உறுப்பினர்
கே.ஜோதிலட்சுமி, சிஐடியு மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம், விவசாய சங்க பொருளாளர் ஆர்.குழந்தைவேலு, ஏஐஐஇஏ இன்சூரன்ஸ் தென்மண்டல துணைத்தலைவர் ஆர்.தர்மலிங்கம், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் என்.பிரவின்குமார், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கே.ராஜாத்தி உள்ளிட்டு பலர் பங்கேற்று போராட்டத்தை வாழ்த்தி பேசினர்.

மனுக்களை நேரில் பெற்ற அதிகாரிகள்

பொதுமக்களின் கூட்டத்தை சமாளிக்க முடியாத காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வந்து பெற்றுகொண்டனர்.

மலைப்போல் குவிந்த மனுக்கள்

கிராம்புற வேலை திட்டத்தில் வேலை கேட்டு பல்லாயிரக்கணக்கான மனுக்கள் பொதுமக்களிடையே பெறப்பட்டது.இதனை கையில் வைக்கமுடியாமல் அலுவலக உதவியாளர்கள் அதிகாரிகளின் வாகனத்தில் வைத்தனர். வாகனம் முழுவதும் பொதுமக்களின் மனுக்களாக இருந்தது.

Leave A Reply