பொள்ளாச்சி, ஜுன் 20-
தாய்மொழிக் கல்வி கற்றலே சிறந்தது என திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன் தெரிவித்தார். பொள்ளாச்சி கள்ளிப்பாளையம் புதூர் கிராமத்தில் அமைந்துள்ள தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப் பள்ளியின் 19ஆவது ஆண்டுவிழா பள்ளியின் தாளாளர் வி.வசந்தா வேலுமணி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக நெடுவாசல் கண்ணன் (சமூகச் செயற்பாட்டாளர்) வரவேற்று பேசினார்.

இதைத்தொடர்ந்து தேசிய விருது பெற்ற “ஜோக்கர் ” திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், தனியார் கல்விக் கட்டண கொள்ளைக்கு பெற்றோர்கள் பலியாகக் கூடாது. தாய்மொழிக்கல்வி கற்றலே சிறந்தது. மிகச்சிறந்த ஆளுமைத் திறன் படைத்தவர்கள் தங்களது தாய்மொழியில் கல்விக்கற்றவர்களே. தாய்மொழிக் கல்வியே நல்ல ஆரோக்கியமான கல்விச்சூழலை உருவாக்கும் என அவர் கூறினார். இதன்பின் பச்சைத் தமிழகம் தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப.உதயகுமார் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார். மேலும், சிறப்பு பங்கேற்பாளராக உடுமலை கௌசல்யா சங்கர் பங்கேற்று பேசினார். மேலும், தமிழ் எங்கள் அறிவுக்குத்தோள் எனும் தலைப்பில் பாட்டரங்கம் நடைபெற்றது. இதில் தமுஎகச கவிஞர் பொள்ளாச்சி அபி, பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் க.அம்சப்ரியா, செயலாளர் இரா.பூபாலன், கொலுசு மின்னிதழ் ஆசிரியர் குழு கவிஞர் புன்னகை பூ.ஜெயக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பின்னர் நடைபெற்ற சிறப்பரங்கத்தில் அரசுப்பள்ளி தமிழாசிரியர் சு.ஜெயசிங் தலைமைவகித்தார். தாய்த்தமிழ் பள்ளியின் செயலாளர் வே.பாரதி தொடக்க உரையாற்றினார். மேலும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மல்லர்  கம்பம் விளையாட்டு மற்றும் பொங்காளியூர் அரசுப்பள்ளி மாணவர்களின் பறையாட்டம் – சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் தாய்த்தமிழ் பள்ளியின் செயற்குழு உறுப்பினர் வே.சக்திவேல், மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் சுரேசு மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply