சென்னை,
தமிழகத்தில் கன்னியாகுமரி, விருதுநகர் உள்பட 11 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்கள் தொடங்கப் படும் என்று பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-நாட்டின் அனைத்துப் பகுதியில் உள்ளவர்களுக்கும் பாஸ்போர்ட் விரைவில் கிடைக்க வேண்டும் என்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தபால் துறை ஆகியவை இணைந்து, தலைமை தபால் நிலையங்கள் மற்றும் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்களை தொடங்கி வருகின்றன.
அதன்படி முதல் கட்டமாக நாடு முழுவதும் 86 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்கள் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டது. அதில் 52 தபால் நிலையங்களில் இந்த வசதி ஏற்கனவே பயன்பாட்டுக்கு வந்து விட்டன.மீதம் உள்ள 34 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு பொதுமக்களிடமிருந்து இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், நாடு முழுவதும் மேலும் 149 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.அதன்படி தமிழகத்தைப் பொருத்தமட்டில் கடலூர், திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்கள் தொடங்கப்பட உள்ளது. காரைக்காலிலும் இந்த வசதி தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் மொத்தம் 235 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் தொடர்பான சேவை கிடைக்க உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.