சென்னை,
டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள உபரி ஊழியர்களுக்கு அரசுத்துறை, அரசு நிறுவனங்களில் வேலை வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) உள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை,  டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சிஐடியு) தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியுசி) தமிழ்நாடு டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்கம், டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டு நடவடிக்கைக்குழு அமைத்துள்ளன.
இந்த கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் செவ்வாயன்று (ஜூன் 20) சென்னையில் பணிப்பாதுகாப்பு கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்தி சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், மாநிலத்தில் உள்ள இதர அரசு நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் காலமுறை ஊதியம், சலுகைகளை வழங்க வேண்டும். அடிப்படையான தொழிலாளர் நலச்சட்டங்களை டாஸ்மாக் ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும். பணிவிதிகள், பணிப்பதிவேடு உருவாக்கி பராமரிக்க வேண்டும்.
மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு புதிய கடைகள் திறக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். தற்போது செயல்படும் கடைகளின் எண்ணிக்கையை இறுதிப்படுத்தி தேவையான ஊழியர்கள், உபரி ஊழியர்கள் என வகைப்படுத்தி கல்வித்தகுதி, பணிமூப்பு அடிப்படையில் அரசுத் துறைகள், நிறுவனங்களில் வேலை வழங்க வேண்டும். பணித்தொடர்ச்சியுடன் மாற்றுப்பணி வழங்கும் இதற்கான அறிவிப்பினை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான ஊதிய உயர்வு அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஊழியர்களின் கோரிக்கைகளை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றும் வரை அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராடுவோம்.
இவ்வாறு அந்த தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது.
மாநாட்டில் மு.சண்முகம், வே.சுப்புராமன், ஆ.ராசவேல் (தொமுச), அ.சவுந்தரராசன், கே.திருச்செல்வன், கே.பி.ராமு (சிஐடியு), டி.எம்.மூர்த்தி, என்.பெரியசாமி, டி.தனசேகரன் (ஏஐடியுசி), இராம.முத்துக்குமார், நா.இராமசுந்தரம், இரா.பாலகிருஷ்ணன் (பாட்டாளி தொழிற்சங்கம்), முனைவர் க.மகாதேவன், க.பேரறிவாளன், மதுரை முத்துப்பாண்டி (தொழிலாளர் விடுதலை முன்னணி) உள்ளிட்டோர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.