திருப்பூர், ஜூன் 20 –
திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் மதுபானக்கடை பிரச்சனையில் போராடிய மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் விதத்தில் 16 பெண்கள் உள்பட 32 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதாக காவல்துறை மிரட்டி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து முறையிட்டனர்.

திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திங்களன்று அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் மணி என்கிற முருகசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, திமுக முதலிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் விஸ்வலிங்கசாமி, மதிமுக நகரச் செயலாளர் சிவபாலன், சம்பத், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமசாமி, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் தமிழ்வேந்தன், தமாகா சார்பில் தனசேகரன் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.எஸ்.உமா ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதில், முதலிபாளையம் சிட்கோ பகுதியில் பத்தாண்டுகளுக்கு முன்பு மதுபானக்கடை திறக்கப்பட்டபோதே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அளித்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி தேசிய நெடுஞ்சாலை பகுதிகடைகள் மூடப்பட்ட நிலையில் இந்த கடைக்கு அதிக அளவு குடிகாரர்கள் கூட்டம் வந்ததுடன், சிட்கோ தொழிற்பேட்டைக்கு வேலைக்கு வந்து செல்லும் பெண் தொழிலாளர்களுக்கு மிகப்பெரும் இன்னல்கள் அதிகரித்துள்ளன. இதுபற்றி பலமுறை முறையிட்டும், கிராம சபைக் கூட்டம் நடத்தி மதுக்கடைக்கு எதிர்ப்பாக தீர்மானம் நிறைவேற்றியும், போராட்டம் நடத்தியும்கூட அரசு நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் மதுபானக் கடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள், இளைஞர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். அப்போது சில அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு நிர்வாகம் தொடக்கத்திலேயே செயல்பட்டிருந்தால் இப்பிரச்சனையைத் தவிர்த்திருக்க முடியும். இப்பிரச்சனையில் ஏற்கெனவே 24 பேர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட நிலையில் பிணையில் வெளிவந்துள்ளனர். தற்போது மேலும் 16 பெண்கள் உள்பட 32 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும், ஏற்கெனவே கைதானோர் மீது புதிய பிரிவுகளில் வழக்குப் பதியப் போவதாகவும் காவல் துறை கூறியிருப்பது அரசு நிர்வாகத்தின் பிடிவாதப் போக்கைக் காட்டுகிறது.

மேலும் போராடிய பொது மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் முயற்சியாகவும் உள்ளது. இது சரியான நடவடிக்கை இல்லை. எனவே இம்முயற்சியைக் கைவிடுவதுடன், மாவட்ட நிர்வாகம் சிட்கோ பகுதி மக்களின் உணர்வை மதித்து அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.அதேபோல் சாமளாபுரம் பகுதியில் மதுக்கடை வேண்டாமென நியாயமாகப் போராடிய மக்களை அச்சுறுத்தும் விதமாக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

Leave A Reply