புதுதில்லி ;
ஜிஎஸ்டி சட்டத்தை நிறைவேற்ற ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
அன்றிரவு 11 மணிக்கு துவங்கி, ஜூலை 1 ஆம் தேதி அதிகாலை 12.10 மணி வரை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இக்கூட்டுக் கூட்டம் நடைபெறும் என்றும், அப்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜிஎஸ்டி வரிவிதிப்பை அறிமுகம் செய்து உரையாற்றுவார் என்றும் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
“ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை ஜூலை ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதற்காக ஜூன் 30-ஆம் தேதி இரவு 11 மணிக்கு நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கும்.
இக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை துவக்கிவைத்து உரையாற்றுவார். அப்போது, குடியரசுத் துணைத் தலைவர் டாக்டர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் எச்.டி. தேவகவுடா ஆகியோரும் இருப்பார்கள். குடியரசுத் தலைவரின் உரையைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி தொடர்பான 2 குறும்படங்கள் திரையிடப்படும்.
ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சியையொட்டி, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்கள், மாநில முதல்வர்கள், ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள், இந்த மசோதாவுக்காக உதவி செய்த அரசு அதிகாரிகள், குழுக்களின் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்று ஜெட்லி கூறியுள்ளார்.
மேலும், ஜிஎஸ்டி தொடர்பாக பேசியுள்ள அருண்ஜெட்லி, “ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலாகும் ஜிஎஸ்டி வரி விதிப்பானது, நாட்டில் வரி ஏய்ப்பை அகற்றும் திறன் வாய்ந்த திட்டம் என்பதால், அரசின் வருவாய் அதிகரிக்கும், மத்திய – மாநில அரசுகளின் செலவீட்டுத் திறன் அதிகரிக்கும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் உடன்பாடான ஒரு தாக்கம் ஏற்படும்” என்று குறப்பிட்டுள்ளார்.
கேரளா, ஜம்மு – காஷ்மீர் மாநிலங்களைத் தவிர அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றியிருப்பதாக கூறியுள்ள ஜெட்லி, கேரளா இந்த வாரத்தில் ஜிஎஸ்டி மசோதாவை பரிசீலிக்கும் என்றும், ஜம்மு – காஷ்மீரும் இதற்கான நடைமுறையில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 6 மாதங்களாக ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமலாகும் என்று அரசு கூறிவந்துள்ளதால், தொழிற்துறையினர் நாங்கள் இன்னும் ஜிஎஸ்டி-க்கு தயாராகவில்லை என்ற பேசுவதற்கே இடமில்லை என்று கூறியுள்ள அவர், அனைத்து வரிவிதிப்புகளுக்குமான சுமார் 80 லட்சம் வரிசெலுத்துநர்களில், கடந்த வாரம் வரை 65 லட்சம் பேர் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்காக பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் கணக்கு விவரங்களை தாக்கல் செய்யும் போது இந்த புதிய ஜிஎஸ்டி அமலுக்கு தொழிற்துறையினர் தயாராக இருந்துள்ளனரா இல்லையா என்பது தெரிந்து விடும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.