பொள்ளாச்சி, ஜூன் 20-
சிபிஎம் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்திடக்கோரி பொள்ளாச்சியில் அனைத்துக் கட்சி மற்றும் சமூக கூட்டியக்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா உறுப்பினர் திருமலைசாமி தலைமை தாங்கினார்.

பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம் முன்னிலை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில வெளியீட்டு செயலாளர் இரா.மனோகரன், சிபிஐ தாலுகா துணை செயலாளர் சண்முகசுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் ச.பிரபு, திராவிடர் கழகத்தின் நகரச் செயலாளர் பரமசிவம், தொ.மு.ச.நகர செயலாளர் கண்ணுசாமி, திமுக இலக்கிய அணியின் ஆர்.ராசு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நகர செயலாளர் ஆர்.எம்.அருள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட பொருளாளர் வி.ஆர்.பழனிச்சாமி நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply