திருப்பூர், ஜூன் 20-
காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.சுசீலா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.பால்ராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.முருகேசன் பேசியதாவது: காலிப்பணியிடங்களுக்கு, மனுக்கள் பெறப்பட்ட பின்பும் தேர்வு செய்வது காலதாமதமாகிறது.

உடனடியாக காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். 10, 20, 30 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியத்தை வழங்காமல் 2 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்து வருகிறது. இந்த ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்று 2 ஆண்டுகள் ஆகியும் வழங்க வேண்டிய குடும்ப சேமநல நிதியை உடனடியாக வழங்க வேண்டும். பல்லடம் ஒன்றியத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், முட்டை போக்குவரத்து படியை வழங்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார். இந்நிகழ்வில் திரளான சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர். முடிவில், மாவட்ட பொருளாளர் கே.கருணாகரன் நன்றி தெரிவித்தார்.

Leave A Reply