திருப்பூர், ஜூன் 20 –
திருப்பூர் மாநகராட்சி 60 ஆவது வார்டு குளத்துப்புதூர் மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காத நிலையில் அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் 4ஆவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். குளத்துப்புதூர் பகுதியில் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதுவும்போதிய மிகவும் குறைந்த வேகத்தில், குறைந்த நேரம் மட்டுமே வருவதால் மக்கள் தேவையான அளவு குடிநீர் பெற முடியவில்லை.

இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் அப்பகுதி பெண்கள் 4ஆவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என்.சுப்பிரமணியம், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜன், கிளைச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் தண்டபாணி, கருப்புசாமி உள்ளிட்ட கட்சியினர் மண்டல அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து உடனடியாக குளத்துப்புதூர் பகுதிக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதாகவும், நேரடியாக அங்கு வந்து அதிகாரிகள் ஆய்வு செய்து குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். மண்டல உதவி ஆணையர் கண்ணன் உள்ளிட்டோர் உறுதியளித்ததின் பேரிலும், உடனடியாக குளத்துப்புதூரில் லாரி மூலம்குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாலும் இந்த போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

Leave A Reply