காந்தி நகர்;
‘சுவச் பாரத்’ என்ற பெயரில் காந்தியை ஏற்கெனவே குப்பை அள்ளுவதற்கான ‘லோகா’வாக மோடி அரசு மாற்றியது. தற்போது, காந்தியின் நினைவகத்தையே, பதஞ்சலி நிறுவனத்தின் குப்பைக் கூடமாக மாற்றிய சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.

இங்குள்ள மகாத்மா காந்தியின் நினைவகம், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன சேமிப்புக் கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷாஹிபாக் பழைய சர்க்யூட் ஹவுஸில் அமைந்துள்ளது மகாத்மா காந்தி ஸ்மிருதி காந்த். 28 அறைகள் கொண்ட இந்த சர்க்யூட் ஹவுஸின் ஒரு அறையில், 95 வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போது, நீதிமன்றம் செயல்பட்டு வந்தது.

மார்ச் 18, 1922 அன்று இந்த நீதிமன்றம் மகாத்மா காந்திக்கு தேசதுரோக வழக்கில் 6 வருடம் சிறை தண்டனை விதித்தது. இந்திய சுதந்திரத்திற்கு பின், இந்த அறை மகாத்மா காந்தி ஸ்மிருதி காந்த் என்ற நினைவு இல்லமாக மாற்றப்பட்டது.

மகாத்மா காந்தியின் புகைப்படங்கள், ஓவியங்கள், கோப்புகள், ஆவணங்கள் இந்த அறையில் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த மே 25-ஆம் தேதி முதல் ஸ்மிருதி காந்த்-தில் உள்ள 28 அறைகளில் 18 அறைகள் பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவன குடோன்களாக மாற்றப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நீதிமன்றமாக செயல்பட்டு வந்த அறையில் இருந்த காந்தியின் கோப்புகள், ஆவணங்கள் அனைத்தும் அறையின் ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டு விட்டன. ஏராளமான அரசியல் ஆவணங்கள் நாசமாகியுள்ளன. இது காந்தியவாதிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Leave A Reply