தாராபுரம், ஜூன் 20-
தாராபுரம் பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள் பாதி வளர்ந்த நிலையில் வெட்டும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். தாராபுரம் பழைய அமராவதி பாசன பகுதியான அலங்கியம், தளவாய்பட்டிணம், கொளிஞ்சிவாடி, தாராபுரத்தில் பரவலாக சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. தற்போது நிலவும் கடும் வறட்சியின் காரணமாக 10 மாத பயிரான கரும்பு போதிய தண்ணீர் இன்றி 4 அடிக்கு மேல் வளரவில்லை. இதனால் விவசாயிகள் தற்போது கரும்பை அலங்கியம், சீத்தக்காடு, கொளிஞ்சிவாடி, தாராபுரம் பகுதியில் வெட்டி ஆலை அமைத்து வெல்லம் தயாரிக்க முற்படுகின்றனர்.

மேலும், தண்ணீர் குறைவு காரணமாக கரும்பு அவுட்டன் குறைந்து, வெல்ல உற்பத்தி கடுமையாக பாதிக்கும். ஆலை ஆட்டும் தொழிலில் மேச்சேரி, மேட்டூர் பகுதியிலிருந்து முகாமிட்ட தொழிலாளர்கள் கரும்பு உற்பத்தி குறைவால் போதிய கூலி கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர். ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதலீடு செய்த விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கூட கிடைக்காது என கண்ணீர் மல்க விவசாயிகள் கூறுகின்றனர்.

Leave A Reply