திருப்பூர், ஜூன் 20 –
புதிய ஊதிய மாற்ற விகிதம் நிறைவேற்றவும், ஓய்வூதிய மாற்றம் அமலாக்கவும் வலியுறுத்தி பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் அனைத்து சங்கங்களின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக செவ்வாயன்று காலை நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கக் கிளைத் தலைவர்கள் வாலீசன், உண்ணிகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சங்கச் செயலாளர் பழனிவேல்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநிலப் பொறுப்பாளர் பா.சௌந்தரபாண்டியன் இந்த போராட்டத்தைத் தொடக்கிவைத்தார்.

பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைச் செயலாளர் தங்கராஜ், மாவட்ட நிர்வாகிகள் காந்தி,முருகசாமி, ராஜசேகர், கல்யாணராமன், மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியம், அதிகாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கே.பிரசன்னன், அதிகாரிகள்சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மனோகரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.இதில் அனைத்து சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கிளைச் செயலாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.

கோவை:
கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் செவ்வாயன்று அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முகமது ஜாபர் தலைமை வகித்தார். அதிகாரிகளின் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.டி.பிரசன்னா போராட்டத்தை துவக்கி வைத்தார். ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், மாநில துணைத் தலைவர் கே.மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் மகேஸ்வரன், ஒப்பந்த ஊழியர்களின் மாவட்ட செயலாளர் டி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். இப்போராட்டத்தில் ஏராளமான பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு:
ஈரோடு பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு எஸ்என்இஎ மாவட்டத் தலைவர் வி.சண்முகம், பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கமாவட்ட தலைவர் எஸ்.கண்ணுச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் எல்.பரமேஸ்வரன், எஸ்என்இஎ மாவட்ட செயலாளர் ஜி.துரை, எஐஜிஇடிஒஎ மாவட்ட செயலாளர் எம்.மாயக்கிருஷ்ணன், எஸ்என்எடிடிஎ மாவட்ட செயலாளர் ஜி.சுகுமார், எஐபிடிபிஎ மாவட்ட செயலாளர் பி.சின்னச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply