திருப்பூர், ஜூன் 20-
திருப்பூர் மாநகராட்சியில் வாழத் தகுதியான ஊதியம் நிர்ணயித்து வழங்க வலியுறுத்தி துப்புரவு மற்றும் குடிநீர் விநியோகம் செய்யும் தொழிலாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் இதனுடன் இணைக்கப்பட்ட 8 ஊராட்சிகள் மற்றும் 2 நகராட்சிப் பகுதிகளில் பணியாற்றி வந்த 184 குடிநீர் பணியாளர்கள், 34 துப்புரவு தொழிலாளர்கள், 5 ஓட்டுனர்கள் என 223 பேர் கடந்த 2012 ஆம் ஆண்டு மாநகராட்சி ஊழியர்களாக தரம் உயர்த்தப்பட்டனர்.

ஆனால் இவர்களுக்கு இன்றைக்கு மாதம் ரூ.2450 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. கடந்த நான்கு வருட காலமாக இந்த தொழிலாளர்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி சிஐடியு உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் பல கட்ட இயக்கங்களையும், போராட்டங்களையும் நடத்தியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் காலவரையற்ற பட்டினிப் போராட்டமும் நடத்தப்பட்டது. மாநகராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில அரசு அதிகாரிகள் மட்டத்தில் இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டாலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்
கப்படவில்லை. எனவே நியாயமான ஊதிய உயர்வு வழங்கும் வரை மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என்று இந்த தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி செவ்வாயன்று (ஜூன் 20) மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேற்படி துப்புரவு மற்றும் குடிநீர் பணியாளர்கள் சுமார் 150 பேர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அலுவலக வளாகத்திலேயே தங்கியிருக்கின்றனர். முடிவு காணும்வரை போராடப்போவதாக அந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply