ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வலியுறுத்தி சேலத்தில் இருந்து  சென்னையை நோக்கி வரும் நடைபயணக் குழுவிற்கு புரட்சி வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு இக்கட்டுரையைத் தொடங்குகின்றேன்.
“நமது நாட்டை நவீன ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற நாடாக உருவாக்க வேண்டுமானால்,  இந்து சமூகம் மற்றும் அதன் கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைந்துள்ள சாதியத்திற்கு எதிராக சமரசமற்ற போராட்டத்தை நடத்த வேண்டியது அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். சோசலிச சமுதாயத்தை உருவாக்குவது இருக்கட்டும், ஆண்டாண்டு காலமாய் இருந்துவரும் உயர்சாதி – தாழ்ந்த சாதி என்கிற இத்தகைய சாதிய அடுக்கினை அடித்து நொறுக்காது, மதச்சார்பற்ற ஜனநாயகத்தைக் கூட அமைத்திட முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதனால், புரட்சிகர ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் என்பதை சாதிய சமூகத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து தனியே பிரித்திட முடியாது,’’ என்பது தோழர் இ.எம்.எஸ். 1979இல் எழுதிய புகழ்பெற்ற வார்த்தைகளாகும்.

நாடு சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகள் கடந்த பின்பும், நாட்டின் பல பகுதிகளிலும்,  அடித்தட்டு மக்களின் வாழ்வில், சாதிய அமைப்புமுறை ஏவியுள்ள தீண்டாமைக் கொடுமைகள் தொடர்வதை இன்னமும் காண முடிகிறது. `தொட்டால் தீட்டு’, `நிழல் பட்டால் தீட்டு’,  ஏன், `தீண்டத்தகாதவர்களின் குரலைக் கேட்டாலே தீட்டு’ என்று கூறும் கொடுமை இன்னமும் நாட்டின் பல பாகங்களில் காணப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் கிராமங்களுக்கு வெளியே  சுகாதாரமற்ற சேரிகளில் வாழும் முறை தொடர்கிறது.  தாழ்த்தப்பட்டவர்கள் பொதுக் கிணறுகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப் படுவதில்லை. அவர்களது குழந்தைகள் சாதி இந்துக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் படிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.  கோவில்கள் அவர்களுக்குத் திறக்காது. கிராமங்களில் உள்ள முடிதிருத்துவோர் மற்றும் சலவைத் தொழிலாளர்களை இவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியாது. நாட்டின் பல பாகங்களில் இதுதான் இன்றைக்கும் நிலையாகும். தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக நாட்டில் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அது இன்னமும் நீடிக்கிறது என்பதே யதார்த்த உண்மையாகும்.

பலநூறு ஆண்டு காலமாக இத்தகைய சாதியப் பாகுபாடுகள் மற்றும் சாதியின் பெயரால் கொடுமைகள் நீடிப்பது, ஏன்? இன்றளவும் ஆதிக்கம் செலுத்தும் மனுதர்ம சாஸ்திரம், பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வகை வர்ணங்களை  நியாயப்படுத்தி, நால் வருணத்தாரிலும் சிறந்தவன் பிராமணனே என்றும், ஏனென்றால் அவன் பிரம்மாவின் மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டவன் என்றும், இவர்களில் சூத்திரர்கள் தாழ்ந்தவனாகவே பிரம்மாவால் பாதத்திலிருந்து படைக்கப்பட்டவன் என்றும் கூறி, சூத்திரன் மற்ற மூவர்ணத்தாருக்கும் பொறாமையின்றி பணி புரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடமைப்பட்டவர்கள் என்றும் கூறுகிறது.
உயர் வர்க்கத்தினருக்கு பிரத்யேக உரிமைகள் என்பதும், ஒடுக்கப்பட்டோருக்கு துன்ப துயரங்களே என்பதும் வர்க்க சமுதாயத்தில் உலகம் முழுதும் உள்ள நிலைமைதான். ஆயினும் சாதீய ரீதியாக மக்களைப் பிரித்து தீண்டாமைக்கொடுமை என்னும் கொடிய சமூக அமைப்பு முறை ஏற்பட்டிருப்பது இந்தியாவில் உள்ள இந்து சமூக முறையில்தான். தீண்டாமைக் கொடுமையும், சாதீயப் பிரிவுகளும் கடவுளால் உண்டாக்கப்பட்டது என்று நாட்டின் பல பகுதிகளில் பாமர மக்கள் இன்னமும் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்து மத சாஸ்திரங்களின்படி நால்வர்ணம் அல்லது சாதியப் பிரிவுகள் என்பவை கடவுளால் உண்டாக்கப்பட்டவை.
கீதையில் கிருஷ்ணர்என்ன சொல்கிறார்?
‘‘சதுர்வர்ணயம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச’’
இதன் பொருள், நான்கு வர்ணங்கள் என்னால் அதாவது கடவுளால் உண்டாக்கப்பட்டது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதைக்கூறிய ஆண்டவனுக்கு, அடித்தட்டைச் சேர்ந்த பக்தன் யாரேனும் சாதியமைப்பை உருவாக்கிய ஆண்டவனே அதை நீங்களே மாற்றித் தரவேண்டும், எங்களை அடிமை நிலையிலிருந்துகாக்க வேண்டும் என வரம் கேட்டு விடுவானோ என்ற பயம் ஏற்பட்டிருக்கும் போலும், அடுத்த இரண்டு வரிகளிலும் அதற்கும் வழிகாட்டிவிடுகிறார்.
‘தஸ்ய கர்த்தாரம மாம்
வித்ய கர்த்தார மன்யம்’
அதாவது, நான்கு வர்ணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டதுதான் என்றாலும் அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால்கூட முடியாது என்று கூறிவிடுகிறார்.
அதாவது, ஒவ்வொருவரும் தான் சார்ந்த வர்ணத்தின் கடமைகளைச் செவ்வனே  செய்து வர வேண்டும். அதுவே அவர்களது `கர்மா’ – அதாவது கடமை.
சந்தோக உபநிஷத் வெளிப்படையாகவே கூறுகிறது: “நீ பிறப்பால் உண்டான உன் வர்ணத்தின் கடமைகளைச் செய்யவில்லை என்றால், பின் நீ அடுத்த பிறவியில் ஒரு `சண்டாளனாக’ (தலித்தாக) அல்லது ஒரு பன்றியாக அல்லது ஒரு நாயாக பிறப்பாய் என்கிறது. அதேபோன்று, நீ உன் வர்ணக் கடமைகளைச் செவ்வனே செய்து வந்தால் அடுத்த பிறவியில் அடுத்த உயர் வர்ணமான வைசியனாகவோ அல்லது சத்திரியனாகவோ அல்லது பிராமணனாகவோ பிறப்பாய் என்கிறது.
இவ்வாறு பிறப்பால் உருவான உன் கடமைகளைச் செவ்வனே செய்ய வேண்டும்   என்று மனுதர்மம் மிரட்டுகிறது.
அதனால்தான் தோழர் இ.எம்.எஸ். “கிரீஸில் அடிமை உறவு முறை என்ன செய்ததோ அதையேதான் இந்தியாவில் வருண வேறுபாடு செய்தது. ஆனால் கிரிஸில் நடந்தது போல் நேரிடையான அடிமை – அடிமை எஜமான் என்பதற்குப் பதிலாக இந்தியாவில் வருண (சாதி) பிரிவினையில் சுரண்டலும் ஒடுக்குமுறையும் மூடி வைக்கப்பட்டுள்ளது,’’ என்றும்
“எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் வருண (சாதி) முறையைச் சுற்றி மத ரீதியான ஒரு திரையும், வருணம் அல்லது சாதி என்பது கடவுளின் உருவாக்கம்  என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தப்பட்டது,’’ என்றும்
“இவைகள் மூலமாக கீழ்சாதிக்காரர்கள் தாங்கள் சுமக்க வேண்டிய அடிமை நுகத்தடியை சந்தோஷமாக சுமக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது,’’ என்றும் குறிப்பிடுகிறார்.
பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் ரயில்கள், பேருந்துகள் மற்றும் தொழிற்சாலைகள் அறிமுகப்படுத்தப்பட்டதும் அவற்றில் தீண்டத்தக்கவர் மற்றும் தீண்டத்தகாதவர் என இரு தரப்பிலிருந்தும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டதும், அவற்றில் பயணம் செய்ததும் சமூகத்தின் நிலைமைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தன. ஆயினும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சமூகத்தில் புரையோடிப் போயிருந்த சாதியக் கொடுமைகளுக்கு எதிராக அடிப்படை மாற்றம் எதையும் கொண்டுவர வில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அவற்றின் மூலமாக “பிரித்தாளும் சூழ்ச்சி’’யையே அது பயன்படுத்தியது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டில் நிலவும் சமூக மற்றும் மத சம்பந்தமான பிரச்சனைகளில் தலையிட மாட்டோம் என்று அறிவித்தது.

ஆயினும் கூட, அந்த சமயத்தில் கல்வி என்பது உயர்சாதியினரின் ஏகபோகமாக இருந்ததால், அதன் செயல்பாடுகள் என்பவை உயர்சாதியினருக்கு உதவிடக்கூடிய வகையிலேயே இருந்தன.
1928 ஜூனில் மாவீரன் பகத்சிங் நடத்தி வந்த `கீர்த்தி’ ஏட்டில் தீண்டாமைக் கொடுமை தொடர்பாக இரு கட்டுரைகள் எழுதியுள்ளார்.
“நம்முடைய நாடு உன்னதமானது என்று பீற்றிக்கொள்கிறோம். ஆனால் இந்த நாட்டில்தான் ஆறு கோடி பேரை தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கிறோம். அவர்கள் தொட்டாலே உயர்சாதியினர் தீட்டாகிவிடுவார்களாம். அவர்கள் கோவிலுக்குள் நுழைந்தால் கடவுள் கூட சீற்றமடைந்து விடுவார். இருபதாம் நூற்றாண்டில்கூட இத்தகு விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது வெட்கக் கேடாகும். நம் நாடு ஓர் உன்னதமான ஆன்மீக நாடு என்று பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால் அனைத்து மக்களும் சமம் என்பதை ஏற்கத் தயங்குகிறோம். அதே சமயத்தில், ஐரோப்பிய கண்டமோ புரட்சி குறித்து பேசிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் புரட்சிகளின்போது அவை சமத்துவத்தை பிரகடனம் செய்துவிட்டன. ஆயினும் நாம், தீண்டத்தகாதோர் பூணூல் அணிந்து கொள்ளலாமா கூடாதா என்றும், அவர்கள் வேதங்களைப் படிக்கலாமா, கூடாதா என்றும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது பாகுபாடு காட்டினால் நமக்கு ஆத்திரம் வருகிறது. அவர்கள் நம் நாட்டிலும் இந்தியர்களுக்கு சம உரிமைகள் கொடுக்கவில்லை என்று புலம்புகிறோம். இத்தகைய விஷயங்களில் முறையிடுவதற்கு உண்மையிலேயே நமக்கு ஏதாவது உரிமை இருக்கிறதா?’’ என்று பகத்சிங் ஆச்சர்யப்படுகிறார்.
பிரிட்டிஷ் ஆட்சியில் மட்டுமல்ல, சுதந்திரம் பெற்றபின் கடந்த 67 ஆண்டு காலத்திலும் அதுதான் நிலைமை. ஆட்சியாளர்கள் தலித்துகளின் வாழ்வில் அடிப்படை மாற்றங்களைச் செய்யக்கூடிய வகையில் எந்தக் கொள்கையையும் அமல்படுத்தவில்லை. சாதியப் பிரச்சனையில் அனைத்து முதலாளித்தவக் கட்சிகளின் அணுகுமுறையும் இதுதான்.
“ஏகாதிபத்தியவாதிகள், நிலப்பிரபுக்கள் மற்றும் பெருமுதலாளிகள் இயற்கையாகவே தங்கள் வர்க்க நலன்களைக் காத்திட வேண்டும் என்பதற்காக சமூகத்தில் நிலவிவரும் சாதிய அமைப்புமுறை, நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலவுடைமை அமைப்புமுறை ஆகியவற்றைப் பாதுகாப்பவர்களாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள்,’’ என்று பி.டி. ரணதிவே சுட்டிக்காட்டுகிறார்.
தங்கள் சுரண்டல் அமைப்புமுறையை மிக வலுவான வகையில் தக்க வைத்துக் கொள்வதற்காக, சாதீய ரீதியிலான மற்றும் வர்க்க ரீதியிலான ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். நாட்டின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து ஆய்வு செய்த அமைப்புகள் அனைத்துமே, நாட்டில் தலித்துகள் நிலைமை என்பது மிக மோசமாக இருப்பதாகவே குறிப்பிட்டிருக்கின்றன.
கிராமப்புரங்களில் உள்ள தலித்துகளில் 70 சதவீதத்தினர் நிலம் இல்லாதவர்கள் அல்லது பெயரளவில் சிறிது வைத்திருப்பவர்களாவர். இதுவே அனைத்துப் பாகுபாடுகளுக்கும் ஆணிவேராகும். இவ்வாறான சமூகக் கட்டுமானத்தின் மீதுதான் ஒட்டுமொத்த சமூக சுரண்டல் அமைப்பே கட்டப்பட்டிருக்கிறது.
2000 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, தலித் மக்களில் கிராமப்புரங்களில் 35.4 சதவீதத்தினரும், நகர்ப்புரங்களில் 39 சதவீதத்தினரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். கிராமப்புரங்களில் உள்ள தினக் கூலிகளில் 61.4 சதவீதத்தினர் தலித்துகள். இது நகர்ப்புரங்களில் 26 சதவீதமாகும்.
மத்திய அரசுப் பணியிடங்களில் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு முறையே 15 சதவீதமும், 7.5 சதவீதமும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆயினும் முதல் நிலை (குரூப் `ஏ’)யில், தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் 10.15 சதவீதமே நிரப்பப்பட்டிருக்கிறது. இரண்டாம் நிலை (குரூப் `பி’) பணியிடங்களில் இது 12.67 சதவீதமாகும். மூன்றாம் நிலை (குரூப் `சி’)  பணியிடங்களில் இது 16.15 சதவீதமாகும். நான்காம் நிலை (குரூப் `டி’) பணியிடங்களில் இது 21.26 சதவீதமாகும். பழங்குடியினர் நிலை இன்னும் மோசம். அதாவது, அவர்களின் நிலை முறையே 2.89, 2.68, 5.69 மற்றும் 6.48 சதவீதமாக இருக்கிறது.
2001இல் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிவரத்தின்படி தலித்துகளில் எழுத்தறிவு விகிதம் 47.1 சதவீதமாகும். இதர பிரிவினரில் 68.8 சதவீதமாகும். பெண்களுக்கிடையில் தலித்துகளில் 41.9 சதவீதத்தினரும், பழங்குடியினரில் 34.8 சதவீதத்தினரும்,  இதரர்களில் 58.2 சதவீதத்தினரும் எழுத்தறிவு பெற்றிருக்கிறார்கள்.

இவர்கள் பிரச்சனைகளை மட்டுமே கையிலெடுத்துப் போராட்டங்களை நடத்திட வேண்டிய நிலையில் உள்ளோம். தலித்துகளின் பொருளாதார நிலைமைகள் இவ்வாறிருக்கக்கூடிய அதே சமயத்தில் அவர்கள் மீதான சமூக ஒடுக்குமுறைகள் எவ்வாறிருக்கின்றன? தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று, தமிழகத்தில் உள்ள கிராமங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் தீண்டாமைக் கொடுமைகள் இன்னமும் நீடிக்கின்றன. 1981க்கும் 2000க்கும் இடைப்பட்ட 16ஆண்டுகளில் தலித்துகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகள் மற்றும்குற்றச்செயல்கள் குறித்து 3 லட்சத்து 57 ஆயிரத்து945 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இவற்றில் எத்தனை வழக்குகளில் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்பது தெரியவில்லை. சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே, நாட்டில் நிலவும் சமூகக்கொடுமைகளுக்கு எதிராக,  சாதீயப் பாகுபாடுகளால் ஏற்பட்டுள்ளசமத்துவமின்மைக்கு எதிராக, சமூகசீர்திருத்தவாதிகள், சாதி எதிர்ப்புப் போராளிகள்பலர் தோன்றியிருக்கின்றனர்.
தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ஜோதிபாய்புலே, ஸ்ரீநாராயணகுரு என எண்ணற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் இதற்காகப் போராடியிருக்கின்றனர். ஆயினும் கூட, நாட்டில் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் இன்னமும் தொடர்கின்றன என்பதும், அவர்களின் பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்து இன்னமும் அடித்தட்டிலேயே இருக்கின்றன என்பதுமே இன்றைய நிலையாகும். எனவே, இதனை ஒழித்திட வேண்டுமானால் நாம் மேற்கொள்ளும் போராட்டங்கள் சாதிய ஒடுக்குமுறை மற்றும் வர்க்க ஒடுக்குமுறை ஆகிய இரண்டுக்கும் எதிரான போராட்டங்கள் இணைக்கப்பட வேண்டும்.
‘‘வெகுஜன ஸ்தாபனங்கள், தங்கள் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகப் போராடும் அதே சமயத்தில் தீண்டத்தகாதவர்கள், பழங்குடியினர், மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினர் ஆகியோரின் பிரச்சனைகள் மீதும் தனிக் கவனம் செலுத்தி, அவற்றையும் தங்கள் கோரிக்கைகளுடன் இணைத்துக்கொண்டு போராட்ட வடிவங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும். அவ்வாறு ஒன்றிணைக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தின் மகத்தான படை மூலமாக, சாதிய பாகுபாட்டின் அடித்தளத்தை அடித்துநொறுக்கி, தீண்டத்தகாதவர்களின் அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, விவசாயப் புரட்சியை தீர்மானகரமான முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  அப்போதுதான் ஜனநாயக சக்திகளுக்கு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வழிதிறந்திடும், அனைத்து உற்பத்திச் சாதனங்களின் சோசலிசமயமாக்கத்தின் அடிப்படையில் மிகவேகமான முறையில் தொழில்மயம் ஏற்பட்டு, சாதியற்ற வர்க்கமற்ற சமுதாயத்தை நோக்கிமுன்னேற முடியும்’’ என்று தோழர் பி.டி.ஆர்.தன்னுடைய வர்க்கம், சாதி மற்றும் சொத்து என்னும் நூலில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வர்க்கப் போராட்டத்தை இருமுனைகளில் நாம் நடத்திட வேண்டியுள்ளது. ஒன்று சமூக சுரண்டலுக்கு எதிராக, மற்றொன்றுபொருளாதார சுரண்டலுக்கு எதிராக. வர்க்கப்போராட்டத்தை இவ்வாறு இரு கால்களின்மூலமாகத்தான் முன்னெடுத்துச் செல்ல முடியும். ஏதாவது ஒரு காலை மட்டும்தான் எடுத்துவைப்போம் என்றால், போராட்டம் நொண்டவே செய்திடும். அதனை வீர்யத்துடன் முன்னெடுத்துச்செல்வது என்பது சாத்தியமில்லை.
இவ்வாறு பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் மற்றும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்னும் இரு கால்களில் நின்று, ஆணவப்படுகொலைக்கு எதிராகவும், தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் நடந்து வரும் பயணக்குழுவை வீர வணக்கங்களை மீண்டும் கூறி வரவேற்கிறேன். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் சமூக ஒடுக்குமுறையை முற்றிலுமாக முறியடிக்கும் வரையில் வீரம் செறிந்த போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

-கே.வரதராசன்

Leave A Reply