சென்னை,
முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கையில்  நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத புதுச்சேரி  நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  உயர்நீதிமன்றம் எச்சரித்நுள்ளது.

புதுச்சேரியில் உள்ள நான்கு நிகர்நிலை பல்கலைகழகங்கள், தனியார் மருத்துவக்  கல்லூரிகளில்  முதுகலை மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு  உரிய கட்டணத்தை  நிர்ணயிக்கக் கோரி  வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்றம்,

“நிகர்நிலை பல்கலைக் கழங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடங்களை சென்டாக் சேர்க்கை குழு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தலாம். அவ்வாறு அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் 10 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கிடையில் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் மருத்துவப் படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க மத்திய அரசு குழு ஒன்றை அமைக்க வேண்டும். அந்தக் குழு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.” என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை காட்டியும்  மாணவர்களை சேர்க்க மறுப்பதாகவும், ‘உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் அதன் மூலமாகவே சேர்ந்து கொள்ளுங்கள்’ எனக் கல்லூரி நிர்வாகம் தெரிவிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு முன் வழக்கறிஞர் வி.பி.ஆர் மேனன் செவ்வாயன்று(ஜூன் 20) முறையிட்டார்.

அதே போல பிருந்தா என்ற மாணவி சென்டாக்கில் 10 லட்ச ரூபாய் செலுத்தி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற்ற நிலையில் அறுபடைவீடு  மருத்துவக் கல்லூரியில் இடமளிக்க அனுமதி மறுப்பதாக  மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் முறையிட்டார்.
இதனையடுத்து நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். மேலும் அறுபடைவீடு கல்லூரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும்படி அறிவுறுத்திய நீதிபதிகள்  அந்த வழக்கை  ஜூன் 27ஆம் தேதி விசாரிப்பதாகவும் தெரிவித்தனர்.

Leave A Reply