கோயமுத்தூர். ஜூன்.

கோவையில் உள்ள ஈஷாயோகா மையத்தில் கடந்த பல ஆண்டுகளாக அரசின் விதிமுறைகளை மீறி சட்டவிரோத கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அரசு நிர்வாகம் கட்டுமான பணிகளை சீலிட்டு நிறுத்தியது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனைத்து விதிமுறைமீறல்களையும் மூடி மறைத்து ஈஷா யோக மையத்தின் சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிறப்பு அனுமதி அளித்திருப்பதாக தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இது தமிழக மக்களிடமும், நேர்மையான அரசு அதிகாரிகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பதவியை பாதுகாக்க மக்கள் நலனை மட்டுமல்ல காடுகள், மலைகள் என இயற்கை வளங்களை சூறையாடும் மோசடிக்கு அதிமுக அரசு துனை போகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி   இக்கரை பூலுவம்பட்டி வனச்சரகம் உள்ளது. மலைதளப்பாதுகாப்புக்குட்பட்ட இப்பகுதி பல்லுயிர் பெருக்கத்திற்கானது. இதனை பாதுகாக்கப்பட வேண்டிய காடு என ஐக்கிய நாடுகள் அங்கீகரிக்கப்பட்ட யுனெஸ்கோ அமைப்பு அறிவித்திருந்தது. இதன் எல்லையில் இருந்து 150 மீட்டர் இடைவெளி விட்டே கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என விதிகள் உள்ளது. ஆனால் இப்பகுதியில் செயல்படும் ஈஷாயோகா மையம் 15 லட்சம் சதுர அடி நிலப்பரப்பில் அனைத்து சட்ட விதிகளையும் மீறி; அனைத்து கட்டிடங்களையும் காப்புரிமைக்காடு என அறிவிக்கப்பட்ட இடத்திலேயே கட்டியிருக்கிறது. இதில் ஒரு சதுர அடி கட்டிடத்திற்கு கூட நகர ஊரமைப்புத்துறையின் அனுமதி பெறப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. தமிழகத்தின் முக்கிய ஆறுகளில் ஒன்றான நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியான இப்பகுதியில் கட்டிடங்கள் கட்டப்பட்டதன் விளைவாக எதிர்காலத்தில் நொய்யல் ஆறு அடையாளமே இன்றி அழிந்து விடுவதற்கான ஆபத்து இருக்கிறது என சுற்றுச்சூழல் புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நகர ஊரமைப்புத்துறை மற்றும் வனத்துறையினர்   கடந்த பத்தாண்டுகளில் சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள் குறித்து பல முறை ஈஷாமையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. பல்வேறு சர்ச்சைகள் ஈஷா யோகா மையத்தின் மீது எழுந்து வந்த நிலையில் வனத்தையும், வளத்தையும் பாதுகாக்க வேண்டும் என 2012ல் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வெற்றிச்செல்வனும், 2017ல் வெள்ளிங்கிரி மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் முத்தம்மாள் என்பவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்குகளின் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கடந்த மாதம் நீதிமன்றத்தில் நகரஊரமைப்புத்துறை ஈஷாவின் கட்டிடங்கள் சட்டவிதிகளுக்கு புறம்பாக கட்டியிருப்பதாக ஆதாரத்துடன் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி, சட்ட விதிமீறல்கள் இருந்த தகவல் தெரிந்தும் ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி சிவன் சிலையை திறந்துவைக்க கோவை வந்தார்.   அப்போதே சட்டத்திற்கு புறம்பாக கட்டிடங்களை கட்டியுள்ள ஈஷா யோகா மையத்தின்   நிகழ்ச்சிகளுக்கு நாட்டின் பிரதமர் வரக்கூடாது என இடதுசாரி கட்சிகள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி உள்ளிட்ட சமூக அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தது.
இருப்பினும், இந்திய அரசியல் சாசன சட்டம் மற்றும் அரசின் விதிமுறைகளை விட ஜக்கியே முக்கியம் என்ற அடிப்படையில் பிரதமர் மோடி ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பங்கேற்று சிலையை திறந்து வைத்தார். இதனால் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர், கவர்னர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இருப்பினும் ஈஷாவின் கட்டிடங்கள் மீதான விதிமீறல் வழக்கில் தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தற்போது திடீரென ஈஷா மையத்தின் சட்டவிரோத கட்டிடங்கள் அனைத்திற்கும் சட்ட அங்கீகாரம் அளித்து தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த ஆணையை கோவை மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது சமூக ஆர்வலர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இதுகுறித்து ஈஷாவின் விதிமுறை மீறல்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதிட்டு வரும் வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான கலையரசன் கூறுகையில்,
தமிழகத்தில் ஆளும்கட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் சுயமாக செயல்படாமல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு இருப்பதால்; இதனை பயன்படுத்தி சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், தமிழகத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக உள்ள கோவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த சட்டவிரோத கட்டிடங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான பின்னணியில் Muஆரம்பம் முதல் இருந்து வருவதாக கருதுகிறோம்.

மேலும், அரசு தரப்பில் வெளியிட்டு இருக்கும் உத்தரவில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் பொதுமக்கள் கருத்து பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கட்டிடம் கட்டப்படுவதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி, கருத்துக்கேட்பு ஆகியவை நடைபெற வேண்டும். ஆனால் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி பெறவேண்டும் என்பது எந்த வகையிலும் சாத்தியமில்லாதது. இது சட்டத்தை கேலி செய்வதாகும். தற்போது தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் வெற்றிசெல்வன் மலைமக்கள் சங்கத்தின் சார்பில் முத்தம்மாள் சார்பிலும் சட்ட வல்லுனர்களை ஆலோசித்தபிறகு நீதிமன்றத்தில் இதுகுறித்த மனுவை தாக்கல் செய்ய உள்ளோம்.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் பல்வேறு தீர்ப்புகளில் சட்டத்திற்கு புறம்பான விதிமீறிய கட்டிடங்கள் குறித்து வன்மையான கண்டனங்களை தெரிவித்திருந்தது.
தற்போது சட்டத்திற்கு புறம்பான கட்டிடங்களுக்கு தமிழக அரசு வழங்கப்பட்ட இந்த சட்ட அங்கிகார உத்தரவை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை ஆகியவைகளை வலியுறுத்தி தனி வழக்கு தொடுக்கவும் ஆலோசித்து வருகிறோம்.

தொடர்ந்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் ஈஷா யோகா மையத்தின் அட்டூழியங்களை வெளிகொண்டு வருபவரும், ஈஷா யோக மையத்தின் தூண்டுதலால் பொய்வழக்கு போட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டவருமான, சுற்றுச்சூழல் ஆர்வலருமான சிவா கூறுகையில், விதிமீறிய கட்டிடங்களுக்கு தமிழக அரசு சிறப்பு அனுமதி வழங்கியதன் விளைவாக இதனை காரணம் காட்டி காருண்யா பல்கலை கழகம் உள்ளிட்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் சட்ட அனுமதியை பெற்றுவிடும். இதனால் காடு இருக்காது மலையும் இருக்காது எல்லாம் கனவாகவே போய்விடும். வறட்சியை எதிர்கொள்வது குறித்து வாய்கிழிய பேசுகிற ஆட்சியாளர்கள் இருப்பதை அழித்துவிட்டு எதை சாதிக்க போகிறார்களோ தெரியவில்லை என்றார்.

Leave A Reply