—–சு. வெங்கடேசன்——-                                                                                                                               ——பொதுச்செயளாலர் (தமுஎகச)——                                         — நேர்காணல்—–
இந்தி திணிப்பு ஒரு ஆபத்தாக இன்றைக்கு முன்வருகிறது. இதன் தற்போதைய வடிவம் குறித்து எப்படி பார்க்கிறோம்? உண்மையில் எந்த அளவிற்கு இது ஆபத்து என்று கருதுகிறீர்கள்?
இந்தி திணிப்புக்கும் அதற்கான எதிர்ப்புக்கும் ஒரு நெடிய வரலாறு உண்டு. 1937 ஆம் ஆண்டு இந்தி திணிப்பு தமிழகத்தில் துவங்கிய போதே, அதற்கு எதிரான போராட்ட வரலாறும் துவங்கிவிட்டது.

இந்த 80 ஆண்டு காலத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்புக்கான மிக நீண்ட வரலாற்றுக் களத்தை கொண்டது தமிழகம். வேறு எந்த மாநிலத்தையும் விட மொழி உரிமைக்காகவும் இந்தி திணிப்புக்கு எதிராகவும் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்திய வரலாறு தமிழ்ச் சமூகத்திற்கு உண்டு.

முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை 1937 இல் தந்தை பெரியார் முன்னெடுத்ததில் தொடங்கி, 1948 இல் நடந்த இரண்டாவது மொழிப் போராட்டம், 1965இல் நடந்த மூன்றாவது மொழிப் போராட்டம் என ஒரு நெடிய வரலாறு நமக்கு உண்டு.

இந்த வரலாற்றை உணர்ச்சிப்பூர்வமாக மட்டும் அணுகாமல், அறிவுப்பூர்வமாக அணுக வேண்டிய தேவையை காலம் கோரி நிற்கிறது. இந்நெடிய வரலாற்றின் ஆக்கப்பூர்வமான தொடர்ச்சியை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

அதனால்தான், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் முதல் களப்பலியான நடராஜன் – தாளமுத்து நினைவாக நினைவுச்சுடர் ஏந்தி இம்மாநாட்டை நாங்கள் துவக்குகிறோம்.
அதே நேரத்தில் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் வைக்கக்கோரி உண்ணாநிலை போராட்டம் நடத்தி உயிர் துறந்த சங்கரலிங்கனார் நினைவுச்சுடர் – விருதுநகரில் இருந்து ஏந்தி வருகிறோம்.

அப்போராட்டத்தில் பங்கெடுத்து உரையாற்றிய விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா, மாநாட்டு அன்று காலை அந்நினைவுச்சுடரைப் பெற்றுக் கொள்கிறார்.
இந்தி திணிப்பு எதிர்ப்பும் – தமிழ் மொழி வளர்ச்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள். இவ்விரு சுடரும் ஒரு திரியில் பற்றி எழவேண்டியது. அதனைத்தான் நாங்கள் முன்னெடுக்க விரும்புகிறோம்.

 மிகச் சரியாக, இந்தி திணிப்பு விவகாரத்தில் இன்றைய தாக்குதலின் தன்மை என்ன?
ஆட்சி மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 117 பரிந்துரைகளை குடியரசுத்தலைவர் மார்ச் 31ஆம் தேதி கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த ஒப்புதலின் மூலம் இந்தி பேசாத மாநில மொழிகளின் மீது ஒரு மிகப்பெரும் அழித்தொழிப்பு பணியை மத்திய அரசு துவங்கியுள்ளது.

குறிப்பாக, நாடாளுமன்றத்தை இந்திமயமாக்குவது என்பதை நோக்கி மிக வேகமாக அவர்கள் செயல்படத் துவங்கியுள்ளனர். குடியரசுத் தலைவர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என இந்தி தெரிந்தவர்கள் இந்தியில்தான் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று அந்தப் பரிந்துரை சொல்கிறது.

இந்தி தெரியாத, இந்தியாவின் 80 சதவீதமான மக்களுக்கும் இந்திய நாடாளுமன்ற செயல்பாட்டுக்குமான உறவு என்னவென்று ஒரு பெரும் கேள்வி எழுகிறது. இந்தி அல்லாத பிற மொழிகளை இரண்டாம் பட்ச மொழியாக நேரடியாக அறிவிக்கவில்லை என்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் இவர்கள் துவக்கியுள்ளனர்.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்துள்ள இந்த 117 பரிந்துரைகளை விரிவாகப் பார்த்தோமேயானால், ஆபத்தின் ஆழம் நமக்குப் புரியும். நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என இந்தப் பரிந்துரை சொல்கிறது.

இந்தி பேசாத மாநிலங்களில் உயர்கல்வி நிறுவனங்களில் கூட இந்தி தேர்வை உறுதி செய்யுமாறு பரிந்துரை சொல்கிறது. மத்திய அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தரும் விளம்பரங்களில் இந்தியை பிரதான இடமாக்கி மாநில மொழியையும் ஆங்கிலத்தையும் இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கிறது.

வங்கிகளின் செயல்பாடுகளில் இந்தி புழக்கத்தை விரிவுபடுத்துவது துவங்கி, விமானத்தின் பயணச்சீட்டு இந்தியில் இருக்க வேண்டும். விமானத்துக்குள் சொல்லப்படுகிற அறிவிப்பு கூட இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது வரை இவர்களது பரிந்துரை நீள்கிறது.

நாடாளுமன்றத்தையும் அரசு நிறுவனங்களையும் கல்வி நிறுவனங்களையும் இந்திமயமாக்குதல் என்பதே இப்பரிந்துரைகளின் அடிப்படை. இது இந்தியாவின் மொழி சமத்துவத்திற்கும் இந்திய ஒற்றுமைக்கும் எதிரானது. எனவே இதற்கு எதிராக தீவிரமான போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இந்தியை கற்றுக் கொண்டால் தான் என்ன?
எந்தவொரு மொழியையும் கற்றுக் கொள்வது தவறல்ல. எத்தனை மொழியும் கற்றுக் கொள்ளலாம். இரண்டு மொழி அறிந்தவன் இரண்டு மனிதன் ஆகிறான் என்று ஒரு பழமொழி உண்டு. இந்தியோ அல்லது வேறெந்த மொழியையோ கற்றுக் கொள்வதை நாம் எதிர்க்கவில்லை.

ஆனால், இந்திய அரசு இந்தி அரசல்ல. அரசியல் சாசனச்சட்டம் சொல்லியிருக்கிற பல தேசிய இனங்களின் ஒன்றியம்தான் இந்த நாடு. அதில் மொழி சமத்துவத்தைத் தான் ஒரு அரசு பற்றி நிற்கவேண்டும். மாறாக, குறிப்பிட்ட மொழியின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவது அரசின் வேலை அல்ல.

மொழி சமத்துவம் முக்கியம் என்று சொல்கிறீர்கள். இதுவரையிலும் இருந்த மத்திய அரசுகள் இதுபற்றி சிந்தித்ததற்கும் தற்போதைய பாஜக அரசு செயல்படுவதற்கும் வேறுபாடுகள் உண்டா?
உண்டு. ஆங்கிலத்தின் இடத்தை முழுமுற்றாக அகற்றி அவ்விடத்தில் இந்தியை அமர வைப்பதே முன்னாள் இருந்தவர்களின் நோக்கம். ஆனால், தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களின் எதிர்ப்பின் காரணமாக இந்நோக்கத்தை அவர்களால் தீவிரமாக செயல்படுத்த முடியாத நிலை இருந்தது.

ஆனால், இன்றைய பாஜக அரசு தனது இந்துத்துவா கொள்கையின் அடிநாதமான பெரும்பான்மை வாதத்தை எல்லா துறையிலும் அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆட்சி மொழி என்று வருகிற போதும், அதனை பிடிவாதமாக செய்கிறது.

தமுஎகச உதயமாகி 40 ஆண்டு கால வரலாற்றில் இந்தி திணிப்புக்கு எதிராக இப்போது இவ்வளவு தீவிரமாக செயல்பட வேண்டிய அவசியம் என்ன?
தமுஎகச உருவான காலத்திலிருந்தே எந்தவொரு மொழியின் மேலாதிக்கத்திற்கு எதிராக கருத்தியல் தளத்தில் செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தது. இன்றைக்கு இந்த பேசுபொருள் முக்கிய இடத்திற்கு வந்ததற்கு காரணம் இதை நடைமுறைப்படுத்துபவர்கள்தான்.

குறிப்பாக, 1965 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, “வருகிற குடியரசு தினத்தன்று ஆங்கிலத்தை முழுமுற்றாக அகற்றி அவ்விடத்தில் இந்தி நிலைநிறுத்தப்படும்” என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்துதான் மிகப்பெரும் மொழிப் போராட்டங்களை இந்த நாடு சந்திக்க நேர்ந்தது.

தங்கள் நிலையில் விடாப்பிடியாக இருந்தவர்கள் கீழ் இறங்கி வந்தார்கள். இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர்பு மொழியாக நீடிக்கும் என்ற நிலை உருவானது. அதற்குப்பிறகு கடந்த 40 ஆண்டுகளாக இந்தியைப் பரப்புவதற்கும் நிலைநிறுத்துவதற்குமான செயல்களை மத்திய அரசு செய்து கொண்டுதான் இருந்தது.

ஆனால் இன்றைய பாஜக அரசு, இந்தி அல்லாத மொழிகளை மத்திய அரசின் செயலாக்க நடவடிக்கைகளில் இருந்து முழுமுற்றாக அப்புறப்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

லால் பகதூர் சாஸ்திரியைப் போல இவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், வெறி கொண்டு வேலை செய்கிறார்கள். எனவே இந்தி திணிப்பு என்பது இதுவரை இல்லாத ஒரு பெரும் ஆபத்தாக இன்றும் முன்வருகிறது. எனவே அதற்கு எதிரான போராட்டமும் மிக தீவிரமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது.

கீழடி அகழாய்வின் இன்றைய நிலை என்ன?
கீழடி அகழாய்வை இரண்டாம் கட்டத்தோடு முடித்துவிட மத்திய அரசு முடிவு செய்தபோது, அதற்கு எதிரான வலிமையான முன்னெடுப்புகளைச் செய்தது தமுஎகச. 2017 ஆம் ஆண்டுக்கான அனுமதியைத் தர மறுத்து , அடம்பிடித்த மத்திய தொல்லியல் துறைக்கு எதிராக பல தளங்களிலும் பல வடிவங்களிலும் நிர்ப்பந்தத்தை கொடுத்துக் கொண்டே இருந்தது தமுஎகச. தமிழகத்தின் அரசியல் கட்சிகளும் தங்களது பங்களிப்பை செய்தன.

இந்தப் பின்னணியில்தான், நான்கு மாதங்களுக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டுக்கான அனுமதியை மத்தியஅரசு வழங்கியது. ஆனால், அனுமதி வழங்கப்பட்ட பின்னும் அதற்கான நிதியை ஒதுக்காமல் ஒரு மாதம் காலம் தாழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக இந்த அகழாய்வு திட்டத்தின் இயக்குநராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாம் மாநிலம் கவுகாத்திக்கு இடமாற்றம் செய்துள்ளது.

இவ்வளவு இடையூறுகள் மற்றும் பிரச்சனைகளுக்குப்பின் 2017 ஆம் ஆண்டிற்கான அகழாய்வுத் தற்போது துவங்கியுள்ளது. இதன் தொடர் நடவடிக்கைகளை கவனமாகப் பார்க்க வேண்டிய தேவை உள்ளது.

கீழடியில் தற்போது அகழாய்வு செய்யப்பட்டிருக்கும் பகுதி சிறிதளவுதான். இன்னும் நிலத்திற்கு அடியில் பல நூறு ஏக்கர் பரப்பில் அந்த மாநகரம் பரந்து விரிந்திருக்க கூடும் என்று கருதப்படுகிறது. அது குறித்து என்ன கருதுகிறீர்கள்?
கீழடியில் அகழாய்வு நடக்கிற அந்த தொல்லியல் மேடு 110 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அகழாய்வு நடந்துள்ள பகுதி என்பது வெறும் 50 செண்ட் இடம் மட்டும்தான். அதாவது, 1சதவீதத்திற்கும் குறைவான இடத்தில் தான் அகழாய்வு பணி செய்யப்பட்டுள்ளது.

எனவே இன்னும் மிகப்பெரும் பரப்பளவில் அகழாய்வினை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. இதுகுறித்து நாம் கூடுதலாக கவனமும் அக்கறையும் செலுத்தவேண்டும். இப்பெரும் பரப்பில் இருக்கிற நகரமைப்பை முழுமையாக அகழாய்வு செய்து , பாதுகாக்கும் திட்டம் ஒன்றை மத்திய-மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்.

குஜராத்தில் உள்ள தொழவீரா போல பாதுகாக்கப்பட்ட திறந்தவெளி அருங்காட்சியகமாக இதனை மாற்ற முடியும். இதற்காக தொலைநோக்குப் பார்வையோடு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். இன்றைக்கு உள்ள நிலையில், மத்திய அரசு இதை செய்யாது; எனவே மாநில அரசு முழுமையான முன் முயற்சி எடுக்க வேண்டும்.

கீழடி பற்றி இப்போது வலியுறுத்துவது என்ன?
கீழடியின் அகழாய்வை தொடர்ந்து நடத்துவதை மத்திய தொல்லியல்துறை உறுதிப்படுத்த வேண்டும். மாநில தொல்லியல் துறையும் கீழடியில் அகழாய்வுப் பணியைத் துவக்க வேண்டும். அதே நேரத்தில், இப்பெரும் தொல்லியல் மேட்டை பாதுகாப்பது மிக அடிப்படையான ஒரு செயலாக உள்ளது.

வெறும் ஆறு மாதத்தில் 5000 ஏக்கர் நிலத்தை ஒரு தனியார் நிறுவனம் கமுதியிலே கையகப்படுத்த முடியும் என்றால், 2000 ஆண்டுக்கும் மேலான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு இடத்தை பாதுகாக்கவும் தன்னகப்படுத்தவும் மத்திய-மாநில அரசுகளால் ஏன் முடியாது?
இதுகுறித்த ஒரு நீண்ட கால தெளிவான திட்டமிடல் உருவாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அகழாய்வினை கூர்மையோடு கவனித்தாக வேண்டும்.

கீழடியிலிருந்து சென்னை மாநாட்டை நோக்கி பிடிமண் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறீர்கள். பிடிமண் எடுப்பது என்பது நிலப்பிரபுத்துவச் சமூகத்தின் சடங்கு அல்லவா? அதனை ஒரு முற்போக்கு அமைப்பு செய்வது பொருத்தமானதா?

ஒரு இடத்தின் அல்லது ஒரு மனிதனின் அல்லது ஒரு செயலின் நினைவை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கடத்த எத்தனையோ குறியீட்டுச் சடங்குகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.அதில் ஒன்றுதான், பிடிமண் எடுத்தல். 

ஒரு பண்பாட்டு அமைப்பு என்ற முறையில் இந்நிகழ்வின் உள்ளடக்கத்தை நமக்கானதாக மாற்றிப் பயன்படுத்துதல் ஒன்றும் தவறல்ல. கீழடியில் பிடிமண் எடுத்தல் என்பது தமிழர் நாகரிகத்தின் ஆதி நினைவை 21 ஆம் நூற்றாண்டில் இன்றைய சமூகத்திற்கு கடத்தும் ஒரு முயற்சியின் குறியீடாகும்.

புதைந்து கிடக்கும் பழம்பெரும் நாகரிகத்தைப் பற்றிய அறிவுச் சேகரத்தை, விவாதக் குறிப்பை, கலை மரபை இன்றைய இளம் தலைமுறைக்கு நாம் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. குறிப்பாக, ஒருகோடியே 35 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கூடங்களிலே இருக்கிறார்கள்.

கல்லூரியைச் சேர்த்தால், மாணவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டும். சாம்பியன் டிராபி கிரிக்கெட் துவங்கி பாகுபலியின் வசூல் வரை ஏறக்குறைய இந்த 2 கோடி பேரும் அறிவார்கள். ஆனால், இதில் 2 சதவீதம் பேராவது கீழடியை அறிவார்களா என்று தெரியவில்லை. நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டிய ஒரு பெரும் செய்தி கீழடியில் இருக்கிறது.

மதங்களும், சாதிகளும் வைதீக கடவுளர்களும் உருவாகும் முன்பே இருந்ததொரு நாகரிகச் செழிப்பை அவர்களின் கற்பனைப் பரப்புக்குள் விரித்தாக வேண்டும்.கடவுளர்களைப் படைப்பதற்கு முன்பான மனிதனின் கடந்த காலம் பற்றி நிகழ்காலத்தில் காணக்கிடைக்கும் வாய்ப்புகளை அகழாய்வுக் குழிகள் நமக்குத் தருகின்றன. எனவேதான் தமுஎகசவும், இந்திய மாணவர் சங்கமும் கீழடி மண்ணேந்தி வருகிறோம்.

தமிழகத்தின் பண்பாட்டு வெளியில் பெரும் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலமிது, மொழியின் மீதும் பண்பாட்டின் மீதும் நிகழ்த்தப்படும் இத்தாக்குதலுக்கு எதிராக பண்பாட்டு களத்திலும் வலிமை மிகுந்த முன்னெடுப்புகள் தேவை. ஒரு விரிந்த பண்பாட்டு அணிசேர்க்கையை உருவாக்க வேண்டிய காலமிது.

இந்தி திணிப்பு முயற்சி 1937 இல் நடந்தபோது, தந்தை பெரியார் அதைத்தான் செய்தார். அதுவரை கடுமையாக விமர்சித்த சைவர்களைப் பார்த்து ‘உங்கள் சிவனார் அருளிய தமிழுக்கு வந்துவிட்டது ஆபத்து’ என்று சொல்லி போராட்டக் களத்துக்கு அழைத்தார்.
மொழிப் பிரச்சனையை பண்பாட்டு அரசியல் என்ற விரிந்த பரப்பில் அவர் அணுகினார்.

அதனுடைய பரிமாணங்களை அடுத்து வந்த காலங்களில் தமிழகம் கண்டது. வைதீக அடையாளங்களுக்கு மாற்றாக தமிழ் அடையாளங்கள் மேலெழுந்தன. இன்று இந்துத்துவாவுக்கு எதிராக பண்பாட்டுத் தளத்தில் வீரியத்தோடு செயல்பட வேண்டிய காலம். நீண்ட நெடிய முற்போக்கு மரபைக் கொண்ட தமிழகம், இச்சவாலுக்கு முகங்கொடுக்க தன்னை வலிமையோடு தயார்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

அந்த வகையில்தான் தமுஎகச, இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து ஜூன் 26 சென்னையில் மாநாட்டை நடத்த உள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் புவிப் பரப்பெங்கும் இது ஒரு அதிர்வை உருவாக்கும். ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்திற்கு பிறகு நிகழும் அடுத்த பண்பாட்டு பாதுகாப்பு நகர்வு இது!

சந்திப்பு; எஸ்.பி.ராஜேந்திரன். 

Leave A Reply