மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் முதல்வரின் பதில் திருப்தியளிக்காததால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:-

தனியரசு: மாடுகளை விற்க, வாங்க எந்த தடையும் இருக்கக் கூடாது. மத்திய பாஜக அரசு இந்த சட்டத்தின் மூலம் பாசிச சிந்தனையை தேசத்தில் விதைத்துள்ளது.

தமீமுன் அன்சாரி: கால்நடைகளை யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சந்தைப்படுத்துவதற்கும், விற்பதற்கும், வாங்குவதற்கும் ஏற்ற வகையில் தடையில்லா சிறப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்.

கருணாஸ்: ஜனநாயக நாட்டில் யார் எதை உண்ணவேண்டும் என கூற யாருக்கும் உரிமையில்லை. மாமிசங்களை விருப்பி சாப்பிடும் எண்ணற்ற மக்கள் இருக்கக்கூடிய இந்த சமுதாயத்தில் இவர்கள் இதைச் செய்யக் கூடாது. அதைச் செய்யக் கூடாது எனச் சொல்வது மக்களின் உரிமைக்கு எதிரானது. மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் இயற்ற வேண்டும்.  மாடுகளை வளர்க்கும் விவசாயிகளின் வருமானத்தை தடுக்கும் வகையில் பா.ஜ.க உத்தரவிட்டுள்ளது.

வெளிநடப்பு செய்த அதிமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த மூன்று பேருமே கடந்த 2016-ஆம் ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலின் போது, அதிமுக-வின் அதிகாரப்பூர்வ சின்னமாக இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிட தக்கது. இதற்கு முன் பேரவையில் எத்தனையோ அமளி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்ற நிலைகளிலும் கூட பேரவையிலிருந்துவெளிநடப்பு செய்ததில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

Leave A Reply