செங்கல்பட்டு,
சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திடக்கோரியும்  தனிச்சட்டம் இயற்றக்கோரியும்  சேலம் முதல் சென்னை வரை  நடைபெறும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்  நடைபயணக்குழுவுக்கு தலைமை தாங்கி வரும்  முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜூக்கு செங்கை செயற்பாட்டாளர்கள் அம்பேத்கர் விருது வழங்கி கவுரவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு நகருக்கு  வருகை தந்த  பயணக்குழுவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில்  முன்னணியின் திருப்போருர் திருக்கழுக்குன்றம் பகுதிக்குழுவின் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் எதிரில் சமூக செயல்பாட்டாளர்களின் சார்பில் வரவேற்பு கூட்டம் நடைபெற்றது. கவிஞர் அ.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றிட வலியுறுத்தி நடைபெற்று வரும் நடைபயணத்தின் குழுத் தலைவர் க.சாமுவேல்ராஜ் அவர்களுக்கு பௌத்த ஒளி பண்பாட்டுப் பேரவையின் சார்பில் 2017ம் ஆண்டிற்கான புரட்சியாளர் அம்பேத்கர் விருதினை வழங்கி கவுரவித்தனர். இதனைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் பி.சம்பத், பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் தீபா, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மாரியப்பன் ஆகியோருக்கு தலைவர்களின் திருஉருவப் படத்தை நினைவுப் பரிசாக வழங்கினர். வரவேற்பை ஏற்று முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத் உரையாற்றினார்.

ஆர்.நல்லகண்ணு
முன்னதாக செங்கை புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள பெரியார் சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.தமிழரசன் தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் மாலை 6 மணிக்கு  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சாதி மறுத்து திருமணம் செய்து கெண்டவர்களுக்கு நினைவுப்பரிசினை வழங்கி சுதந்திர போராட்ட வீரர் ஆர்.நல்லகண்ணு சிறப்புரையாற்றினார்.

நீதிபதி ஹரிபரந்தாமன்
தாம்பரம் சண்முகம் சாலையில் புதனன்று (ஜூன் 21) மாலை 6 மணிக்கு நடைபெறும் நடைபயண வரவேற்பு பொதுக்கூட்டத்தில் நீதியரசர் து.ஹரிபரந்தாமன் சிறப்புரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தில் பி.சம்பத். கே.சாமுவேல்ராஜ், க.பீம்ராவ், அ.பாக்கியம், வி.சி.க மாநில துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட பலர் உரையாற்ற உள்ளனர்.

Leave A Reply