திருப்பூர், ஜூன் 19 –
நியாயமான சம்பள உயர்வு வழங்கும் வரை போராட்டம் உறுதியாகத் தொடரும் என்று அறிவித்து பாத்திரத் தொழிலாளர்கள் பட்டினிப் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்கள் கூலி உயர்வு வழங்கக் கோரி கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி தொடங்கி கடந்த 55 நாட்களாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல கோடி மதிப்பிலானவர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் பாத்திர உற்பத்தியாளர்கள் பிடிவாத போக்கை கைவிட்டு தொழிலாளர்களுக்கு உரிய கூலி உயர்வை வழங்க முன்வர வேண்டும் என்று பாத்திர தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் திங்களன்று காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் அவிநாசி ரோடு அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் தலைமை தாங்கினார். மாலை 5 மணிக்கு தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டத்தை தி.மு.க.வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் முடித்து வைத்துப் பேசினார். இதில் சிஐடியு, ஏடிபி, எல்பிஎப், ஹெச்எம்எஸ், ஏஐடியுசி, ஐஎன்டியுசி, பிஎம்எஸ், காமாட்சியம்மன் பாத்திரதொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பாத்திர தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தின் முடிவில் அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் நாளை (புதன்கிழமை) நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் 22-ந்தேதிமுதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் அன்றிலிருந்து பெரியார்காலனி முதல் தண்ணீர் பந்தல் காலனி வரை உள்ள அனைத்து பாத்திர கடைகளையும் மூடுமாறு கடை உரிமையாளர்களை வலியுறுத்துவது என்றும், பாத்திர கடைகள் மற்றும் பட்டறைகளுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பொருட்கள் மற்றும் இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பொருட்களை வர விடாமல் தடுப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

Leave A Reply