சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு, விதி 110 கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வாசித்தார்.

அதில், “வன வளத்தையும், வன உயிரினங்களையும், பொது மக்களையும் பாதுகாக்கும் மகத்தான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள வனப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் போது வன உயிரினத் தாக்குதலால் உயிரிழக்கும் துயர நேர்வுகளிலும், வனக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிக ளுடனான மோதல்களில் உயிரிழக்க நேரிடும் நேர்வுகளிலும் உயிரிழக்கும் வனப் பணியாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ. 4 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்” என்றார்.

வன வளத்தை மேலும் பாதுகாக்கவும் அந்த உணர்வை அனைவரிடமும் வளர்க்கவும், வனப்பகுதியில் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களின் இயற்கைச் சார்ந்த வாழ்க்கை முறையை தற்கால சந்ததியினருக்கும் கொண்டு சேர்க்கும் வகையிலும், உள்ளூர் மக்களை இயற்கைச் சுற்றுலா திட்டத்தில் முழுமையாக பங்கேற்கச் செய்ய “சூழல்சார் சுற்றுலாக் கொள்கை’’-2017 உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கங்கள் கனிணி மையம்;

அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்தும் முற்றிலும் கணினிமய மாக்கப்பட்டு மைய வங்கியியல் கணினி சேவை முறை செயல்படுத்தப்படும். தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் ரூ. 40 கோடி செலவில் விரல் ரேகை படிப்பி-அச்சுப்பொறி வழங்கப்படும்.

இந்த ஆண்டில் 114 கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ. 23 கோடியே 10 லட்சம் மதிப்பில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும். திருச்சி, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் 15 புதிய கிளைகள் ரூ. 2 கோடியே 25 லட்சத்தில் துவக்கப்படும் என்று முதலமைச்சர் கூறினார்.

Leave A Reply