சென்னை,
மாதவரம் பால் பண்ணைபகுதியில் அமைக்கப்பட்டு வரும் வண்ணமீன் வானவில் பூங்காவை விரைவில் முதலமைச்சர் திறந்து வைப்பார் என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

பேரவையில் திங்களன்று (ஜூன் 19) எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்புகையில், ‘‘கொளத்தூர் தொகுதியில் வண்ணமீன் பூங்கா, ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுமா? வண்ண மீன்களுக்கான இயற்கை தீவனம் அருகாமையிலேயே கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? வண்ணமீன் தொழில் செய்கிறவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளதை சீர்செய்யப்படுமா? வண்ண மீன் ஏற்றுமதி மையம், தனி வாரியம் ஏற்படுத்தப்படுமா’’ என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், ‘‘கொளத்தூர் பகுதியில் போதிய இடவசதி இல்லாததால் மாதவரத்தில் வண்ணமீன் வானவில் பூங்கா அமைக்கப்படுகிறது. அதனை வண்ணமீன் வளர்ப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பூங்கா திறக்கப்பட்ட பிறகு வண்ணமீன் விற்பனையில் தமிழகம் கேரளாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடிக்கும். உறுப்பினரின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படும்’’ என்றார்.

Leave A Reply