——–ச.சுப்பாராவ்——–
நவம்பர் புரட்சியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு உலகின் அனைத்துப் பகுதி மக்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்று அவர்களுக்கு உத்வேகமூட்டிய ஒரே தலைவராக லெனின் மட்டுமே திகழ்ந்தார். இயல்பாகவே சோவியத் புரட்சியின் வெற்றிச் செய்தி நம் நாட்டுப் புரட்சியாளர்களுக்கும் பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது.

இந்தியர்கள் பலர் எத்தனையோ இடையூறுகளை, இன்னல்களைக் கடந்து உலகின் முதல் சோஷலிச நாடான ரஷ்யாவிற்குச் சென்று, லெனினைச் சந்தித்து இந்திய விடுதலைக்கான ஆலோசனைகளைப் பெற்று வந்துள்ளனர்.

புரட்சியின் வெற்றிக்குப் பிறகுதான் என்றில்லை. அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே, 1907வாக்கிலேயே லெனின் பற்றி அறிந்து வைத்திருந்த இந்தியத் தலைவர்கள் உண்டு. 1907இல் மேடம் காமாவும், எஸ்.ஆர்.ராணாவும் இரண்டாவது அகிலத்தின் ஸ்டட்கார்ட் காங்கிரஸில் கலந்து கொண்டார்கள்.

அவர்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்த பல இந்தியப் புரட்சியாளர்களிடம் லெனின் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். எனினும் புரட்சி முடிந்த பிறகு லெனினைச் சந்தித்த முதல் இந்தியர்கள் என்ற பெருமை பேராசிரியர் அப்துல் ஜாபர் கைரி, பேராசிரியர் அப்துல் சத்தார் கைரி ஆகியோரைத்தான் சாரும்.

இவர்கள் அக்காலத்தில் அகமது ஹைதி, முகமது ஹாரிஸ் என்ற பெயர்களில் தலைமறைவாக ரஷ்யா சென்றார்களாம். இவர்கள் 1918 நவம்பர் 23ஆம் தேதி லெனினை கிரெம்ளினில் சந்தித்தார்கள். இவர்களது பேச்சுவார்த்தை பற்றி அதிகாரப்பூர்வமான குறிப்புகள் இல்லை. பின்னர், நவம்பர் 25 அன்று இருவரும் அனைத்து ரஷ்ய மத்திய செயற்குழுவில் உரையாற்ற அழைக்கப்பட்டார்கள்.

தம் உரையில் இவர்கள், ‘ரஷ்யப் புரட்சி எங்களுக்கு போராட்டத்திற்கு புதிய பாதையைக் காட்டியுள்ளது‘ என்று குறிப்பிட்டார்கள். அன்று இவர்கள் லெனினுக்குப் பரிசளித்த தந்தப் பூண் வைத்த சந்தனக் கைத்தடி இன்றும் மாஸ்கோவின் லெனின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

லெனினைச் சந்தித்த மற்றொரு முக்கியமான இந்தியப் புரட்சியாளர் ராஜா மகேந்திர பிரதாப். அவர் 1915இல் காபூலில் இடைக்கால இந்திய அரசாங்கத்தை உருவாக்கியவர். அவர் தனது பிரதமர் மௌலானா பரக்கத்துல்லா, மௌல்வி அப்துல் ராப் பெஷாவரி, மண்டயம் பிதிவாதி பயங்கரம் திருமாலாச்சாரியார் ( இவர் பாரதி வேலைபார்த்த இந்தியா பத்திரிகை முதலாளியின் சகோதரர்), தலீப் சிங் கில், இப்ராகிம் ஆகிய தனது தோழர்களோடு, 1919 மே 7ஆம் தேதி லெனினை கிரெம்ளினில் சந்தித்தார்.

ஒரு மஹாராஜா, சில இஸ்லாமியர்கள், ஆச்சாரமான தமிழ் ஐயங்கார், ஒரு சீக்கியர் என்று அன்றைய புரட்சியாளர்களின் கலவை நமக்கு இன்றும் வியப்பூட்டுகிறது. மகேந்திர பிரதாப் ரிலிஜன் ஆஃப் லவ் என்ற தனது சிறு நூலை லெனினுக்குப் பரிசளித்தார். லெனின் அதில் சில கட்டுரைகளை ஏற்கனவே படித்திருந்தார்.

அப்போது லெனின் ராஜாவிடம், கூறியது இந்தக் கணம் வரை உண்மையாக உள்ளது. ‘மதம் இந்தியர்களைக் காப்பாற்றாது. ரஷ்யாவிலும் டால்ஸ்டாய் போன்ற சிலர் இதே போல் முயற்சி செய்து தோற்றுப் போனார்கள். இந்தியாவிற்குப் போய் வர்க்கப் போராட்டத்தை கையிலெடுங்கள்.

விடுதலைக்கான பாதை அப்போதுதான் நெருங்கிவரும்,‘ என்றார் லெனின் என்று பின்னாளில் மண்டயம் ஐயங்கார் நினைவுகூர்ந்தார். ஆனால் இந்த சந்திப்பில் மிகப் பெரிய விசேஷம் , மற்ற அனைவரிடமும் சிறிது நேரம் மட்டுமே பேசிய லெனின், இப்ராகிமிடம் மட்டும் நீண்ட நேரம் உரையாடினார். காரணம், அவர் பஞ்சாபின் ஒரு எளிய விவசாயி!

1921 ஜுலையில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது காங்கிரஸ் நடந்த போது, பெர்லினிலிருந்து வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா, பாண்டுரங்க சதாசிங், அம்பியாகான் லுஹானி உள்ளிட்ட ஏராளமான புரட்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

1921 ஆகஸ்ட் 23ஆம் தேதி பூபேந்திரநாத் தத்தா என்ற ஒரு புரட்சியாளர் கம்யூனிஸ்ட் ரெவல்யூஷன் – பைனல் சொல்யூஷன் ஆஃப் த இந்தியன் பிராப்ளம் என்ற ஆய்வுக் கட்டுரையை லெனினுக்கு அனுப்பினார்.

உடல்நலம் குன்றி, கார்க்கியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நிலையிலும் அதைப் படித்த லெனின், ‘ உங்கள் கட்டுரையைப் படித்தேன், சமூக வர்க்கங்கள் பற்றி இப்போது நாம் வாதிட வேண்டாம். காலனியப் பிரச்னை குறித்த எனது கருத்துக்களில் மட்டும் இப்போது கவனம் செலுத்தினால் போதும் என்று நினைக்கிறேன்.

இந்தியாவில் விவசாய சங்கங்கள் இருந்தால் , அவை குறித்து அய்வு செய்யுங்கள்,‘ உங்கள் வி.உல்யானோவ் (லெனின்) என்று 26ஆம் தேதி பதிலளித்துவிட்டார். லெனினின் கட்டளையின்படி ஆய்வு செய்த தத்தா, 1923இல் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

பின்னர் 1952இல் டயலெக்டிக்ஸ் ஆஃப் லேண்ட் எகனாமிக்ஸ் ஆஃப் இந்தியா என்ற புகழ்பெற்ற நூலை எழுதினார். இந்த தத்தாவின் மூத்த அண்ணன் பெயர் நரேந்திரநாத் தத்தா. நரேந்திரநாத் தத்தா ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்து துறவி விவேகானந்தராக மாற, தம்பி லெனினைச் சந்தித்து புரட்சியாளனாக மாறியது காலத்தின் அழகான விளையாட்டு‘

அதே 1921இல் கிழக்கத்திய நாடுகளுக்கான பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர்கள் லெனினைச் சந்தித்தார்கள். அதில் ஒரு மாணவரான ரஃபீக்கிற்கு ஒரே அதிர்ச்சி. விருந்தினர்களுக்கு ஜீனி, பால் இல்லாமல் காய்ந்த ஆப்பிளிலிருந்து வடிக்கப்பட்ட தேநீர் போன்ற ஒன்று தரப்பட்டது.

தலைவர் லெனினும் அதையேதான் சுவைத்துக் குடித்தபடி உரையாற்றினார். இதென்ன கொடுமை என்று ரஃபீக் வியந்த போது, அன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் குழந்தைகளுக்கு மட்டுமே பால், ஜீனி போட்டு தரவேண்டும் என்பது அரசாங்க உத்தரவு என்றார் லெனின். பிறகு லெனின், ரஃபீக்கிடம், ‘இங்குள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கற்றுக் கொள்.

புத்தகங்களிலிருந்து மட்டுமல்ல. இங்கு மக்கள் புரட்சியை எப்படி முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கற்றுக்கொள். இந்தியா போனதும், காலனியத்திற்கு எதிரான உனது போரைத் துவக்கு‘, என்றார்.

அவர் சொன்னது நமக்கும் சேர்த்துத்தான்!

Leave A Reply