திருப்பூர், ஜூன் 18-
திருப்பூர் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக இளைஞர் ஒருவரை காவல் துறையினர் ஞாயிறன்று கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆதியூரைச் சேர்ந்தவர் பொன்னத்தாள் (82). கணவர் காளியப்பன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மகன்கள் இருவர், திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர்.

இந்நிலையில், தனது தோட்டத்து வீட்டில் பொன்னத்தாள் தனியாக வசித்து வந்தார். கடந்த 11-ம் தேதி மாலை அவரது வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் மூதாட்டி உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக குன்னத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவஇடத்துக்கு சென்ற காவலர்கள் அங்கு சென்று புலன் விசாரணை செய்தனர். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி துண்டால் கழுத்து நெரித்து கொலை செய்ததாகத் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அதேபகுதியைச் சேர்ந்த திருவாய் முதலியூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தமிழரசன் (26) என்பவரை குன்னத்தூர் காவலர்கள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் தமிழரசன் மனைவி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கையில் காசு இல்லாததால் பொன்னாத்தாள் தனியாக இருந்ததை அறிந்த தமிழரசன் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகைக்காக கொலை செய்தது தெரியவந்தது.

Leave A Reply