“நாம் ஐந்து, நமக்கு இருபத்தைந்து” என்று முஸ்லீம் சமூகத்தினரை பிரதமர் மோடியே கிண்டலடித்திருக்கிறார்.  குடும்பக்கட்டுப்பாடு தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள “நாம் இருவர்”, “நமக்கு இருவர்” என்கிற முழக்கமானது, கணவன் – மனைவி இருவர் என்பதையும், அவர்களுக்கு இரு குழந்தைகள் என்பதையும் குறிக்கிறது. இதனைத்தான் மோடி சற்றே மாற்றி முஸ்லீம் என்றால் அவனுக்கு நான்கு மனைவிகள் என்றும், இது மொத்தத்தில் ஐந்தாகும் என்றும் அவர்கள் ஐவருக்கும் மொத்தத்தில் இருபத்தைந்து குழந்தைகள் என்றும், கிண்டலடித்துள்ளார். இவ்வாறு குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, 2002இல் நரேந்திர மோடி கூறியிருந்தார். அதே ஆண்டு பிப்ரவரியில் குஜராத்தில் கோத்ரா நிகழ்வுக்குப்பின்னர் முஸ்லீம்கள் மீதான இனப்படுகொலைகளை நாம் பார்த்தோம். இதன்பின்னர் ஒருசில மாதங்கள் கழித்து தேர்தல் நடந்தது. பல இடங்களில் அவர் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் இவ்வாறே பேசினார். பாதிப்புக்கு உள்ளான முஸ்லீம்களுக்கு நிவாரண முகாம்களை அளிக்காதது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது அவர் எவ்வாறு பதிலளித்தார் தெரியுமா?

“நான் என்ன செய்யணும் என்று நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு நிவாரண முகாம்கள் நடத்தணுமா? குழந்தை உற்பத்தி மையங்களை உருவாக்குவதுதான் எங்கள் வேலையா?” என்றார். இந்திய அரசமைப்புச்சட்டத்தின்கீழ் முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ஒரு முதலமைச்சர், தங்கள் மாநிலத்தில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தினர் குறித்து (இவர்கள் அம்மாநிலத்தில் சுமார் 9 சதவீதத்தினராவார்கள்)  கிண்டலடித்து அவர்களை சமூகத்திலிருந்து முழுமையாக ஒதுக்கியே வைத்திருந்தார்.

“நாம் ஐந்தா?”

முஸ்லீம்கள் என்றால் ஒவ்வொரு கணவனுக்கும் நான்கு மனைவிகள் என்றும் அவர்கள் குழந்தைகளை வரிசையாகப் பெற்றுத்தள்ளுவார்கள் என்றும், இதன் காரணமாக முஸ்லீம்கள் எண்ணிக்கை மிகவேமாக அதிகரித்திடும் என்றும் இப்போதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.   முஸ்லீம்கள் தங்கள் மதத்தின்படியும், தங்கள் உரிமையியல் சட்டத்தின்படியும் ஒரு கணவர், ஒரே சமயத்தில் நான்கு மனைவிகளை வைத்துக்கொள்ள முடியும்தான். முஸ்லீம்கள் அவ்வாறுதான் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றே பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,  மணமான ஆண் முஸ்லீம்கள் எண்ணிக்கை 3 கோடியே 61 லட்சமாகும். இவர்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு மனைவிகள் என்றால், பின்னர் மணமான பெண் முஸ்லீம்கள் எண்ணிக்கையானது சுமார் 14 கோடியே 44 லட்சங்களாக இருந்திட வேண்டும். ஆனால் ஒட்டுமொத்த முஸ்லீம் பெண்களின் மக்கள்தொகையே சுமார் 8 லட்சத்து 40 லட்சங்கள்தான். ஒரு நாளைக்கு முன் பிறந்த சிறுமியும் இந்த மொத்த மக்கள்தொகையில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கும். இவ்வாறு, நேற்று பிறந்த முஸ்லீம் சிறுமியையும் சேர்த்தால்கூட, ஒவ்வொரு முஸ்லீம் ஆணுக்கும் நான்கு மனைவிகளை ‘சப்ளை’ செய்ய முடியாது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகள் நமக்கு ஒவ்வொரு மதத்திலும் எத்தனை ஆண்கள் – பெண்கள் மணமானவர்கள் என்கிற கணக்கை நமக்கு அளிக்கின்றன. ஒவ்வொரு மணமான பெண்ணும் நிச்சயமாக ஒரு மணமானவருக்கு மனைவியாகத்தான் இருக்க முடியும். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து நாம் சராசரியைக் கணக்கிட்டோமானால்,  1000 மணமான முஸ்லீம் ஆண்களுக்கு 1043 மணமான முஸ்லீம் பெண்கள் என்றிருப்பதைப் பார்க்க முடியும். இதன்மூலம் 1000 ஆண்களில் வெறும் 43 பேர் மட்டுமே ஒரு மனைவிக்குக் கூடுதலாக பெற்றிருப்பது தெரியவரும். அதாவது 99 சதவீத முஸ்லீம் ஆண்கள் ஒரு மனைவிக்கு மேல் பெற்றிருக்கவில்லை என்பதைக் காணமுடியும். எனவே இவ்வாறு இந்து மதவெறியர்கள் கூறும் “நாம் ஐந்து” என்னும் விமர்சனம் வடிகட்டிய பொய்யாகும்.

சரி, மதத்தின் அடிப்படையிலும், சட்டத்தின் அடிப்படையிலும் ஒரு மனைவிக்கு மேல் அனுமதிக்காத,  மதத்தில் உள்ள ஆண்களின் நிலை என்ன? அவர்களுக்கு ஒன்றுக்கும் மேல் மனைவி உண்டா? ஆம் எனில், எத்தனை? கீழே உள்ள அட்டவணை -1ஐப் பார்த்தோமானால், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பல மதத்தினர், ஒரு மனைவிக்கு மேல்  பெற்றிருப்பதைப் பார்க்க முடியும். இந்துக்களைப் பார்த்தோமானால், 1000 மணமான ஆண்களுக்கு, 1019 மணமான பெண்கள் என்றிருக்கிறது. எவரேனும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைப் பெற்றிராமல் இது சாத்தியமில்லை. இது இந்து சட்டம் மற்றும் இந்து மதத்திற்கு எதிரான செயலாகும். முஸ்லீம்களைத் திருமணம் செய்த இந்து பெண்களை மீளவும் கொண்டுவர வேண்டும் என்று கூறி, ‘வீட்டிற்குத் திரும்புவோம்’, ‘ஜிகாத் காதல்’ என்றெல்லாம் பிரச்சாரம் செய்திடும் ஆர்எஸ்எஸ் கூடாரம்,   இவ்வாறு இந்து சட்டத்திற்குப் புறம்பாகவும், இந்து மதத்திற்குப் புறம்பாகவும் ஒரு மனைவிக்கு மேல் திருமணம் செய்துகொண்டுள்ள இந்துக் கணவர்கள் குறித்து வாயே திறப்பதில்லையே, ஏன்? இவ்வாறு இரண்டாவது மனைவியாகிப்போன பெண்களுக்கு சட்டரீதியாக எவ்வித உரிமைகளும் கிடையாதே, இத்தகைய பெண்கள் குறித்து ஆர்எஸ்எஸ் ஏன் கவலைப் படவில்லை?

அட்டவணை 1: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி

மணமான ஆண்கள் (எதிர்) மணமான பெண்கள்

மதம் 1000 ஆண்களுக்கு மணமான பெண்களின் எண்ணிக்கை
இந்து 1019
முஸ்லீம் 1043
கிறித்துவம் 1047
சீக்கிய சமயம் 1016
புத்த மதம் 1023
சமண மதம் 1014
இதர மதங்கள் 1041
சராசரி 1023

 

நமக்கு இருபத்தைந்தா?

“நமக்கு இருபத்தைந்து” குழந்தைகள் என்று கூறி மோடி, முஸ்லீம்களைக் கிண்டல் அடித்திருக்கிறார். அதாவது ஒவ்வொரு முஸ்லீம் கணவனுக்கும் நான்கு மனைவிகள் என்றும், அந்த நான்கு மனைவிகளும் 25 குழந்தைகள் பெற்றுத்தள்ளுவதுபோலவும் கூறியிருக்கிறார். அதாவது சராசரியாக ஒரு மனைவி 7 குழந்தைகளும், மற்ற 3 மனைவிகளும் தலா 6 குழந்தைகளும் பெறுவதாகக் குறிப்பிடுகிறார். இவ்வாறு இவர்கள் 6, 7 குழந்தைகளோடு நின்றுவிடவில்லை. 2015 ஜனவரி 7 அன்று பாஜக எம்பி-யான சாக்ஷி மகாராஜ் என்பவர் மீரட்டில் முஸ்லீம்களைக் குறித்து ஒரு கூட்டத்தில், “நான்கு மனைவிகள், நாற்பது குழந்தைகள் என்கிற கருத்தாக்கம் இந்தியாவில் வேலை செய்யாது,” என்று பேசி, ஒவ்வொரு முஸ்லீம் பெண்ணும் பத்து குழந்தைகள் பெற்றுத்தள்ளுவதாகக் கூறியிருக்கிறார். அவர் அந்தக்கூட்டத்தில் மேலும், ”ஒவ்வொரு  இந்துப் பெண்ணும் இந்து மதத்தைப் பாதுகாத்திட குறைந்தது நான்கு குழந்தைகளையாவது பெற்றுத்தருவதற்கு இதுவே சரியான தருணம்” என்றும் பேசியிருக்கிறார். அதாவது இந்துப் பெண்களின் வேலை என்பது பிள்ளைகளைப் பெற்றுத்தருவது மட்டுமே. இதே தொனியில்தான் இதர பாஜக தலைவர்களும் பேசி வருகிறார்கள். இதுபோல்தான் நாஜிக்கள் ஆட்சி செய்த காலத்தில் ஹிட்லரும் பேசி வந்தார். 1943இல், நாஜித் தலைவர்கள் மத்தியில் ஒரு சட்டம் இயற்றுவது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதாவது அனைத்துப் பெண்களும், அவர்களுக்குத் திருமணம் ஆகியிருந்தாலும் சரி, அல்லது தனியாக இருந்தாலும் சரி, நான்கு பிள்ளைகள் பெற்றுத்தர வேண்டும் என்று சட்டம் இயற்றலாமா என்று விவாதித்து வந்தார்கள். எனினும் இந்தச் சட்டம் அமலுக்கு வரவில்லை.

இந்துமதவெறியர்கள் பிரச்சாரம் செய்வதுபோல, இன்றைய தினம் முஸ்லீம் பெண்கள் 6 – 7 அல்லது 10 குழந்தைகள் பெறுகிறார்களா? நிச்சயமாக இல்லை என்றுதான் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு கூறுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையானது, ஒவ்வொரு மதத்திலும் உள்ள மணமான பெண்கள் பெற்று, உயிருடன் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைத் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது ஒவ்வொரு மதத்திலும் உள்ள பெண்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனைக் குழந்தைகள் இருக்கின்றன என்பதை அறிய முடியும். இந்த அறிக்கையை ஆய்வு செய்வதிலிருந்து முஸ்லீம் பெண்கள் உட்பட அனைத்து மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் சராசரியாக 2 – 3 குழந்தைகள்தான். மோடியோ அல்லது சாக்ஷி மகாராஜ் போன்றவர்கள் கூறுகிறபடி எந்த முஸ்லீம் பெண்ணுக்கும் 6 – 7 அல்லது 10 குழந்தைகள் கிடையாது. இவ்வாறு இவர்கள் கூறுவது வடிகட்டிய பொய்யாகும்.

அட்டவணை 2: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு மதத்திலும் உள்ள

பெண்கள் பெற்றெடுத்து உயிருடன் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை

 

மதம் ஒவ்வொரு பெண்ணுக்கும் உயிருடன் உள்ள குழந்தைகள்
இந்து 2.36
முஸ்லீம் 2.82
கிறித்துவம் 2.29
சீக்கிய சமயம் 2.32
புத்த  மதம் 2.31
சமண மதம் 2.05
இதர மதத்தினர் 2.46
சராசரி 2.41

 

இங்கே ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவு, அவர்களுக்குக் குழந்தை பிறப்பது, அதனைப் பேணி வளர்ப்பது – இவை அனைத்துமே ஒருவிதமான இன்ப உணர்வுடனும், சமூக பொறுப்புணர்வோடும் நடைபெற வேண்டியவைகளாகும். இதர மிருகங்கள் வாழ்வதைப்போல இதனைப் பார்க்கக் கூடாது. குறிப்பாக, நம் நாட்டில், குழந்தைகளைப் பேணிப்பாதுகாத்து வளர்ப்பதில், பெற்றோர் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்கிறார்கள் என்பது முழுக்க முழுக்க உண்மையாகும். இத்தகு நிலையில், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் எத்தனை குழந்தைகள் என்று கணக்கெடுப்பது, மிகவும் இழிவான ரசனையாகும். அவ்வாறே கணக்கெடுத்தாலும் கூட ஒரு பசு எத்தனைப் பசுங் கன்றுகளை ஈன்றது என்றுதான் பார்ப்பார்களேயொழிய, எத்தனை காளைக் கன்றுகளை ஈன்றது என்று பார்க்க மாட்டார்கள். ஆனால் மோடியோ, சாக்ஷி மகாராஜாவோ  அல்லது இதர பாஜக தலைவர்களோ ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். விஷயம் இத்துடன் மட்டும் முடிந்துவிடவில்லை. 2002 செப்டம்பர் 22 அன்று மோடி, “நாம் ஐந்து, நமக்கு இருபத்தைந்து” என்பதிலிருந்து, “ஐந்துக்கு இருபத்தைந்து, இருபத்தைந்துக்கு அருநூற்று இருபத்தைந்து” என்று பேசியுள்ளார்.  என்னே கணிதப் புலி! இவ்வாறு மோடியின் கணக்கு உண்மை என்றால், இந்த 25 குழந்தைகளும் ஆண் குழந்தைகளாக இருக்க வேண்டும், பெண்குழந்தைகள் அல்ல. துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் இவ்வாறு மோடி பேசிய பேச்சை எல்லாம் மக்கள் மிகவும் எளிதாக எடுத்துக்கொண்டுள்ளார்கள், பெரும்பாலானோர் அதனை ஏற்றுக்கொண்டும் உள்ளார்கள். இது,   ஒரு தந்தைவழி நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் ஆண் மக்களின் உச்சபட்ச வெளிப்பாடாகும்.

வெளிநாடுகளிலிருந்து ஊடுருவிவந்ததாகக் கூறும் கூற்றுகள்

2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் மக்கள்தொகை முறையே 80.45 சதவீதம் மற்றும் 13.43 சதவீதமாகும். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது இது 79.8 சதவீதம் மற்றும் 14.2 சதவீதமாக மாறி இருந்தது. மோடி உட்பட பாஜக தலைவர்களால் வெளிநாடுகளிலிருந்து நிறைய முஸ்லீம்கள், குறிப்பாக வங்கதேசத்திலிருந்து, இந்தியாவிற்குள் ஊடுருவி வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், இதுதான் முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையிலானதற்குக் காரணம் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக ஊடுருவி வந்தவர்கள் குறித்து அதிகாரபூர்வமாக எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை.   2001 மக்கள்தொகை கணக்கெடுப்பில் வங்க தேசத்திலிருந்து 30 லட்சத்து 84 ஆயிரத்து 826 பேர் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. உண்மையில் இவர்கள் அனைவருமே முஸ்லீம்கள் அல்ல. அப்படியே இவர்கள் அனைவரும் முஸ்லீம்கள்தான் என்று வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும்கூட, மொத்த முஸ்லீம் மக்கள்தொகையில் அது வெறும் 2.2 சதவீதம்தான். இந்த எண்ணிக்கையை மொத்த முஸ்லீம் மக்கள்தொகையிலிருந்து கழித்தால்கூட அது 13.43 சதவீதத்திலிருந்து 13.06 சதவீமாகக் குறையலாம், அவ்வளவுதான். இவ்வாறு முஸ்லீம் மக்கள்தொகை வெளிநாடுகளிலிருந்து ஊடுருவி வந்தவர்களால் அதிகரித்துவிட்டது என்று கூறுவதெல்லாம் ஒட்டுமொத்தமாகத் தவறாகும். இப்போதும்கூட பாஜகவினர் இவ்வாறுதான் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். சென்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் மோடி இதனை மிகவும் வேகமாகக் கூறிக்கொண்டிருந்தார். குறிப்பாக மேற்கு வங்கத்தின் எல்லைப்புற மாவட்டங்களில் இவ்வாறு அவர் மிகவும் வெறித்தனமாகப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.

இவ்வாறு நாம் மேலே கூறியிருப்பதிலிருந்து, 2001க்கும் 2011க்கும் இடையே  முஸ்லீம்கள் எண்ணிக்கை சதவீதம் சற்றே கூடியிருக்கிறது. முஸ்லீம் மக்கள்தொகை உயர் விகிதத்தில் அதிகரித்திருப்பது உண்மைதான். 2001 மற்றும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் எண்ணிக்கை   முறையே 17 சதவீதமாகவும் 25 சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது. முஸ்லீம்களின் எண்ணிக்கை விகிதம் அதிகமாக இருப்பதற்கான காரணம் என்ன?  இதற்கான காரணத்தை அட்டவணை 2-ஐ சற்றே நுணுகி ஆராய்ந்தால் கண்டுகொள்ள முடியும். முஸ்லீம் பெண்களின் மத்தியில் குழந்தைப்பேறு சற்றே அதிகமாக இருக்கிறது. (2011இல் 2.82 சதவீதம்). குடும்பக் கட்டுப்பாடு குறித்த அறிவு முஸ்லீம் பெண்கள் மத்தியில் குறைவாக இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பொதுவாகவே பின்தங்கியுள்ள ஒரு சமூகத்தில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கான புரிந்துணர்வும் குறைவாகவே இருந்திடும்.  நாட்டில் உள்ள புள்ளிவிவரங்களிலிருந்தும், சச்சார் குழு அறிக்கையிலிருந்தும் முஸ்லீம்கள் சமூக ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. கல்வியில் முன்னேறியுள்ள தென்னிந்தியாவில் உள்ள சில மாநிலங்களில், எடுத்துக்காட்டாக கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் முஸ்லீம் தாய்மார்களின் குழந்தைகள் எண்ணிக்கை முறையே 2.20 மற்றும் 1.98 ஆகும். இவை தேசிய சராசரியைவிட மிகவும் குறைவானதாகும்.  இம்மாநிலங்களில் குடும்பக்கட்டுப்பாடு குறித்த புரிதல் முஸ்லீம்கள் மத்தியிலும் அதிகமாக இருப்பது இதற்குக் காரணமாகும்.  ஏனெனில், 2001இல், முஸ்லீம் பெண்களின் மத்தியில் குழந்தைப்பேறு 3.15 ஆக இருந்தது, 2011இல் 2.82ஆகக் குறைந்துவிட்டது. வெளிநாடுகளிலும் குழந்தைப்பேறு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பொதுவாக உழைக்கும் பெண்கள் மத்தியில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதில் குடும்பக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது அதிகமாக இருக்கிறது. முஸ்லீம் சமூகத்தில் உழைக்கும் பெண்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். முஸ்லீம் பெண்களின் மத்தியில் அதிகக் குழந்தைகள் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால், இங்கே நம்முன் உள்ள கேள்வி என்னவெனில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் பிரச்சாரம் செய்துவருவதுபோல, எதிர்காலத்தில் முஸ்லீம்கள் எண்ணிக்கை அதிகரித்திடுமா என்பதேயாகும்.  இப்போதுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி முஸ்லீம்கள் எண்ணிக்கை அதிகரித்துவருமானால் இன்னும் 272 ஆண்டுகள் கழித்துத்தான்,  2283இல்தான் முஸ்லீம்கள் எண்ணிக்கை பெரும்பான்மையானதாக மாறும்.

இதேபோன்று 272 ஆண்டுகள் பின்னோக்கித் திரும்பிப் பார்ப்போம். அதாவது 1739ஆம் ஆண்டில் நாட்டின் நிலை எப்படி இருந்தது. அப்போது பிரிட்டிஷார் நம்மை ஆளவில்லை. இந்த 272 ஆண்டுகளில் நம் நாடு மட்டுமல்ல, உலகம் முழுதும் பெரிய அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் ரயில் இல்லை. மைக்கேல் பாரடே 1821இல்தான் எலக்ட்ரிக் மோட்டாரைக் கண்டுபிடித்தார். அதாவது 1739க்கு 82 ஆண்டுகள் கழித்துத்தான் கண்டுபிடித்தார். சென்ற நூற்றாண்டில் எண்ணற்ற கண்டுபிடிப்புகளை நாம் பார்த்தோம். ஆகாய விமானங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கணினிகள், மொபைல்கள், விண்வெளிக்குப் பயணம் என எண்ணற்ற சாதனைகள். நம் நாட்டிலேயே சென்ற நூற்றாண்டில் பல மாற்றங்களை நாம் பார்த்துள்ளோம். சுதந்திரம், நாடு பிரிவினை போன்று எண்ணற்றவை. அடுத்த 200 ஆண்டுகளிலும், சென்ற 200 ஆண்டுகளில் நடந்ததைவிட,  உலகம் பன்மடங்கு மாற்றம் அடையும் என்பதில் சந்தேகமில்லை.    2283இல் பாஜக என்ற ஒரு கட்சி இருக்குமா? மேலும், இந்த விகிதத்தில் மக்கள்தொகைப் பெருக்கம் ஏற்படுமானால், 2283இல் நம் நாட்டின் மக்கள் தொகை என்ன தெரியுமா? 10 ஆயிரத்து 230 கோடியாகும். அதாவது தற்போதைய உலக மக்கள்தொகையை விட 14 மடங்கு அதிகம். இதனை நாம் கற்பனை செய்திட முடியுமா?

இவ்வாறு முஸ்லீம்களைப் பின்பற்றி ஓடுவதோ அல்லது இந்துப் பெண்களை நான்குக்கு மேல் பெற்றுத்தள்ளுங்கள் என்று சொல்வதோ ஏற்கமுடியாததாகும். இவ்வாறு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரின் அறிவியலற்ற, பகுத்தறிவுக்கு ஒவ்வாத மற்றும் மடத்தனமான  பேச்சுக்களுக்குப்பின்னே ஒளிந்து இருக்கக்கூடிய இழிவான அரசியல் நோக்கங்களை முறியடித்திட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Leave A Reply