”இந்தியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்காத தாஜ்மகால் மற்றும் அதைப் போன்ற மசூதியின் ஸ்தூபிகளை  வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு இனிமேல் பகவத் கீதை, ராமாயணம் போன்ற நூல்களின் பிரதிகளைப் பரிசாக அளிக்க வேண்டும்” என்று பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்காவில் ஜூன் 15ஆம்நாள் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்த கருத்துக்கள் வரலாற்றாய்வாளர்களை திகைப்பில் ஆழ்த்தியிருக்கின்றன. நரேந்திர மோடியின் மூன்றாண்டு ஆட்சியின் சாதனைகளைக் கொண்டாடும் விதமாக பீகார் மாநில பாஜகவினரால் இந்தக் கூட்டம் தர்பங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
”1206 முதல் 1760 வரையிலான காலகட்டம் நவீன காலத்திற்கு முந்தைய இடைக்காலமாக அறியப்படுகிறது.

ஆனால் சில குறிப்பிட்ட அரசியல் சார்ந்தவர்கள் இந்திய வரலாற்றில் இக்காலத்தை இஸ்லாமிய சகாப்தமாகக் கருதுகிறார்கள். இவர்கள் இந்திய வரலாற்றை தவறாகத் திருப்பி எழுதி, அதைச் சிதைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நமது தேசிய நினைவுச் சின்னமாக இருக்கும் தாஜ்மகாலை நமது கலாச்சாரத்திற்கு ஒவ்வாதது என்று கூறுவது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது” என்று இது குறித்து பாட்னா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியரான டெய்ஸி நாராயண் தனது கருத்தினைத் தெரிவித்திருக்கிறார்.

இரண்டு காரணங்களுக்காக ஆதித்யநாத்தின் பீகார் வருகை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக, உத்தரப்பிரதேச முதல்வராக பதவியேற்ற பிறகு, இது அவர் பீகாருக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகும். இரண்டாவதாக இந்தப் பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு முந்தைய தினம் தர்பங்காவிற்கு வந்திருந்த பீகார் மாநில முதல்வரான நிதீஷ்குமார், பீகாரைப் போல மதுவிலக்கு, பெண்களுக்கு 50சத இடஒதுக்கீடு போன்றவற்றை உத்தரப்பிரதேச மாநிலத்தில் வழங்குவதற்குத் தயாரா என்று  ஆதித்யநாத்தின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிவிட்டுச் சென்றிருந்தார்.

அதற்குப் பதிலடியாக பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் தனது உரையை ‘ஜெய் ஸ்ரீ ராம்’, கோமாதா கி ஜெய்’ போன்ற முழக்கங்களுடன் துவக்கினார். அங்கீகாரமில்லாத பசுவதைக் கூடங்களை இழுத்து மூடியது, பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதத்தில் பெண்களுக்கெதிராகச் செயல்படுவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மாநிலக் காவல்துறையில்  ஆன்ட்டி-ரோமியா படையினை உருவாக்கியது போன்ற தனது சாதனைகளைப் பட்டியலிட்டார். பல முஸ்லீம் பெண்கள் தினந்தோறும் தன்னை வந்து சந்தித்து முத்தலாக்கினால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி முறையிடுவதாக கூறிய அவர், முத்தலாக் பற்றி தனது நிலையினைத் தெளிவுபடுத்துமாறு நிதீஷ்குமாருக்கு சவால் விடுத்தார். பெண்கள் மீதான வன்முரை குறித்த இந்தப் பிரச்சனையில் நிதீஷ்குமார் தனது மௌனத்தை உடைக்க மாட்டார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறிய ஆதித்யநாத் தாங்கள் ஒருபோதும் சாதி, மதம் சார்ந்த அரசியலைச் செய்வதில்லை என்றார்.

காலையில் பெய்த மழையில் சேறும் சகதியுமாய் ஆகியிருந்த இடத்தில் நிற்பதற்கான இடம் இன்றித் தவித்த 20000க்கும் மேற்பட்டவர்களிடம், இயற்கைக் கடவுள் தனது கருணையினைக் காட்டியிருப்பதாகவும், இந்த கூட்டம் நடப்பதற்கு முன்பாக கெட்டுப் போயிருந்த இந்த இடத்தின் புனிதத்தை கழுவி சுத்தப்படுத்தியிருப்பதாகவும் கூறினார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமன் பிறந்ததாலும், பீகாரில் உள்ள சீதாமர்கி என்ற இடத்தில் சீதை பிறந்ததாலும், உத்தரப்பிரதேசத்திற்கும், பீகாருக்கும் நெருக்கமான உறவு இருப்பதாகக் கூறிய அவர், அயோத்தியயும், சீதாமர்கியையும் இணைக்கும் வகையில் சாலை வசதிகளை ஏற்படுத்தும் சிறப்புத் திட்டம் ஒன்றினை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நிறைவேற்றுவதற்கு ஒத்துக் கொண்டுள்ளதாகவும் அந்தக் கூட்டத்தில் அறிவித்தார்.

அவருக்கு முன்பாக உரையாற்றிய பீகார் மாநில பாஜக தலைவரான நித்யானந்த் ராய் உத்தரப்பிரதேச முதல்வர் பீகாரைத் தத்தெடுத்துள்ளதாகப் பேசியதை தனது உரையில் குறிப்பிட்டு பேசிய ஆதித்யநாத், தான் பீகாரைத் தெரிவு செய்துள்ளதாகவும், பீகாரில் தாமரை மலரும் வரையிலும் ஓயப் போவதில்லை என்றும் உறுதிபடக் கூறினார்.  நிதீஷ்குமார் கெட்ட சகவாசம் வைத்திருப்பதாகக் கூறிய அவர் ராஷ்ட்ரிய ஜனதாதளத் தலைவர் லாலுவுடன் நிதீஷ் வைத்திருக்கும் உறவானது போலியானது என்றார்.

ஜூன் 21 அன்று 200 நாடுகளுக்கும் மேலாக சர்வதேச யோகா தினத்தினைக் கொண்டாடும் வேளையில், பாகிஸ்தான் மட்டும் அதில் கலந்து கொள்ளாமல் இருப்பதாகவும், அனைவரும் பெரும் எண்ணிக்கையில் அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களைக் கேட்டுக் கொண்டார். தனது பிழைப்பிற்காக பாகிஸ்தான் யோகாவை கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

– சஞ்சீவ் குமார் வர்மா

https://www.telegraphindia.com/1170616/jsp/frontpage/story_157074.jsp

தமிழில் : முனைவர் தா.சந்திரகுரு – விருதுநகர்

Leave A Reply