சென்னை,
தனியார் பால் நிறுவனங்கள், பால் கெட்டுப் போகாமல் இருக்க ஹைட்ரஜன் பெராக்சைட், குளோரின் போன்ற வேதிப் பொருட்களை கலப்பதாக, தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், பால் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தரவிடக்கோரியும் வழக்கறிஞர் சூர்ய பிரகாசம், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து 2 வாரத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து  தமிழக அரசின் சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் சார்பில்  தாக்கல் செய்த பதில்மனுவில்  கூறியிருப்பதாவது :
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை  32 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 886 பால் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
அவற்றில்  699 பால் மாதிரிகள் பாதுகாப்பானவை என்றும், 187 பால் மாதிரிகள்  கலப்படம் செய்யப்பட்டவை என்றும்  தெரிய வந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான பால் மாதிரிகள் எதுவும் இல்லை.

தண்ணீர் கலப்பு, வெஜிடேபிள் ஆயில், கொழுப்பு சேர்ப்பது, பாலின் தரம் குறித்து குறிப்பிடாதது, காலாவதியாகும் தேதி இல்லாதது போன்ற செயல்களுக்காக இதுவரை  143 வழக்குகள் போடப்பட்டு 81 நபர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து, 10.26 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, கடந்த 2011 முதல் 2017ஆம் ஆண்டு வரை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 338 பால் பொருட்கள் மாதிரியில் 196  மாதிரி பாதுகாப்பானது என்றும், 11 மாதிரிகள் பாதுகாப்பற்றது என்றும், 132  மாதிரிகளில்  கலப்படம் இருப்பதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக, 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு  6 லட்சம் ரூபாய் அபராதம்  வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநிலத்தில் முக்கியமான எட்டு நகரங்களிலிருந்து 106 பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு   கிண்டியில் உள்ள மையத்தில் சோதனை செய்யப்பட்டது. அவற்றில்  திருச்சியில் இருந்து வந்த 2 பால் மாதிரிகள் மட்டும்  பாதுகாப்பற்றது என்றும், 22 பால் மாதிரிகளில் கலப்படம் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த பால் கலப்படம் தொடர்பாக ஆய்வு செய்ய மாநில அளவில் தலைமை செயலாளர் தலைமையிலும், மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply