திருப்பூர், ஜூன் 18 –
பாலியல் தொந்தரவில் தப்பிய பெண்ணை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்லடம் காவல் துறை துணை கண்காணிப்பாளரிடம் மாதர் சங்கத்தினர் புகார்அளித்துள்ளனர். பொங்கலூர் ஒன்றியம் கொடுவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவரது கணவர் கருப்பசாமி கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார். இவர்களுக்கு சத்யா (19) என்ற மகளும், மதன்குமார் என்ற மகனும் உள்ளனர். கணவர் இறந்தவிட்ட நிலையில் சுமதி, ரமேஷ் என்ற வேறொரு நபருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

உடன் பிள்ளைகளும் வசித்து வந்தனர். அவரது 19 வயது மகள் அவிநாசிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் குளிக்கும்போது செல்லில் படம் பிடித்து ரமேஷ் பாலியல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார். இதுபற்றி தாய் சுமதியிடம் சொன்னபோதும் அவர் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அம்மாணவி வீட்டிலிருந்து வெளியேறி பாதுகாப்புக்காக பல்லடத்தில் இருக்கும் தனது சித்தப்பா, சித்தி வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

அங்கிருந்து கல்லூரிக்குச் சென்று வருகிறார்.இதற்கிடையே, தனது மகளை உறவினர்கள் கடத்திச் சென்றுவிட்டதாக தாய் சுமதி அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இந்தபுகாரின் மீது விசாரணை செய்வதற்காக காவல் ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை பல்லடத்தில் இருக்கும் மாணவியையும், அவரது சித்தி, சித்தப்பாவையும்காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை வரச் சொல்லியிருக்கிறார். அவர்களும் அங்கு வந்துள்ளனர். அவர்களிடம் உண்மை நிலையை விசாரித்து அறிய வேண்டிய ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை மாணவி சொன்ன விபரங்களை காது கொடுத்துக் கேட்காமல் தாயுடன் போகும்படி கூறியிருக்கிறார். ஆனால் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது பற்றி மாணவி கூறியதை அவர் பொருட்படுத்தவில்லை.

மேலும் ஆத்திரமடைந்து மாணவியை ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை கன்னத்தில் அறைந்து மிரட்டி தாயுடன்தான் போக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார். ஆய்வாளர் தாக்கியதில் அவருக்கு காதில் காயம் ஏற்பட்டு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது சித்தப்பா, சித்தி, மாற்றுத் திறனாளியான அவர்களது குழந்தையையும் நாகூசும் வார்த்தைகளால் மிக மோசமாக அவர் திட்டியிருக்கிறார்.

இந்நிலையில் நியாயம் பெறமாணவி பொங்கலூரில் ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகளைச் சந்தித்து முறையிட்டார். இதையடுத்து நியாயம் வழங்க வேண்டிய காவல் ஆய்வாளரே மிக மோசமான முறையில் தாக்குதல் நடத்தி காது கேட்கும் திறனை பாதிக்கச் செய்ததுடன், மிக மோசமாக நடந்து கொண்டது குறித்து பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அவர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பாலியல் தொந்தரவு அளித்த ரமேஷ் மீதும் நடவடிக்கை எடுத்து சத்யாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மாதர் சங்கத்தின் பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.பவித்ராதேவி வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply