ஈரோடு, ஜூன் 19-
பவானியாற்றில் நடைபெறும் மணல் திருட்டை தடுத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பவானி தாலுகாவின் 6 ஆவது மாநாடு திங்களன்று ஆப்பக்கூடலில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு பவானி தாலுகா தலைவர் கே.செந்தாமரை தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் ஏ.விஜயலட்சுமி அறிக்கையை முன்மொழிந்து பேசினார். மாவட்ட தலைவர் எஸ்.பிரசன்னா, மாவட்ட செயலாளர் ஆர்.கோமதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். வாலிபர் சங்க தாலுகா தலைவர் டி.ரவீந்திரன், சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம், விவசாயிகள் சங்க நிர்வாகி எ.அய்யாவு, என்.சின்னுசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இம்மாநாட்டில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கைத்தறி ஜமுக்காள நெசவுத்தொழிலை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். நிலத்தடி நீர் பாதிக்கின்ற வகையில் பவானி ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். பவானி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள குப்பை கிடங்கை அப்புறப்படுத்த வேண்டும். பவானி அரசு மருத்துவமனையில் போதுமான பணியாளர்களை பணியில் அமர்த்தி நோயாளிகளின் சிரமத்தை போக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் தாலுகா தலைவராக கே.செந்தாமரை, செயலாளராக ஏ.விஜயலட்சுமி, பொருளாளராக தளிர்கொடி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Leave A Reply