ஈரோடு, ஜூன் 19-
அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்க சீட் வழங்காததால், தான் மாடு மேய்ப்பதைவிட வேறுவழி தெரியவில்லை எனக் கூறி ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலரிடம் மாட்டுடன் வந்து மாணவன் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு, கருங்கல்பாளையம் பூங்குன்றனார் வீதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் தினகரன் (14). இவர் கருங்கல்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு ஈரோடு செங்குந்தர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் (அரசு உதவி பெறும் பள்ளி) 9ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு சேர்க்கை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் மாடு மேய்ப்பதை தவிர தனக்கு வேறு வழி தெரியவில்லை எனக்கூறி திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மாட்டுடன் வந்து மனுக்கொடுத்தார். இதன்பின் அம்மாணவர் கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக அப்பள்ளியில் சேர முயல்கிறேன்.

தேர்வு வைக்க வேண்டும். தாளாளரை பார்க்க வேண்டும். தலைமை ஆசிரியரை பார்க்க வேண்டும் எனக் கூறி சில நாட்களும், தேர்வில் தகுதியாகவில்லை எனக்கூறி சில நாட்களும் அலைய வைத்துவிட்டு, தற்போது சீட் இல்லை என கூறி அனுப்பிவிட்டனர். இதனால் நான் மாடு மேய்க்க செல்வதைவிட வேறு வழிஇல்லை. இதை ஆட்சியரிடம் தெரிவித்து, எனக்கு படிக்க அனுமதி பெற்றுத் தரும்படி முறையிட வந்ததாக கூறினார்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம் மனு வழங்கினர். அங்குள்ள கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து சேர்க்கை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவர் அங்கிருந்து சென்றார்.

Leave A Reply

%d bloggers like this: