சேலம், ஜூன் 19-
சேலம் அதிமுக பிரமுகர் நடத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டதாக கூறிபாதிக்கப்பட்டவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மிட்டாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். அதிமுக பிரமுகரான இவர் புதிய பேருந்து நிலையம் அருகே வின் ஸ்டார் ரியல் எஸ்டேட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலில் கவர்சிகரமான விளம்பரம் செய்து அதன் மூலமாக கிடைக்கும் தொகையை பல்வேறு தொழிலில் முதலீடு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 13 மாதத்தில் பணத்தை இரட்டிப்பாக தருவதாக கவர்சிகரமான விளம்பரத்தை வெளியிட்டார்.

இதனை நம்பி சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், பணத்தை முதலீடு செய்தவர்களின் காலம் முதிர்வு பெற்ற பிறகும், பணத்தை திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தாங்கள் செலுத்திய அசல் தொகையை மட்டுமாவது திருப்பிக் கொடுக்குமாறு வாடிக்கையாளர்கள் கேட்டுள்ளனர். இவ்வாறு தங்களது பணத்தை கேட்டவர்களை குண்டர்களை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆவேசமடைந்த வாடிக்கையாளர் 20க்கும் மேற்பட்டோர் ஞாயிறன்று மதியம் வின் ஸ்டார் அலுவலகத்தை முற்றுகையிட்டு, பணத்தை திருப்பித் தரக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் விடிய விடிய, உணவு உறக்கமின்றி போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் இருவர் மயக்கமடைந்தனர். இதனிடையே இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மேலும் பலர், இதுகுறித்து தகவல் அறிந்து தங்களது குழந்தைகளோடு நிறுவனத்திற்கு வெளியே நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் கூறுகையில், எங்களுக்கு கூடுதலான தொகை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் செலுத்திய தொகையாவது திருப்பி தருமாறு பலமுறை கேட்டும், அவர்கள் முறையாக பதில் அளிப்பதில்லை. மீறி கேட்கும் வாடிக்கையாளர்களை குண்டர்களை வைத்து மிரட்டுகின்றனர். குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை விட்டு தற்போது தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இதுவரை நிறுவனத்தின் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வந்து பதிலளிக்க மறுக்கிறார் என்று குற்றம் சாட்டினர். அதேநேரம், இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும், ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் முறையான நடவடிக்கை எடுக்க மறுப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply