புதுக்கோட்டை;
தமிழக அரசு நெடுஞ்சாலைகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்திச் சாலைப் பணியாளர்கள் நடத்திவரும் மாநில அளவிலான பிரச்சார இயக்கத்திற்குத் திங்கள்கிழமையன்று புதுக்கோட்டையில் சிறப்பான வரவேற்று அளிக்கப்பட்டது.

தமிழக அரசு நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் வார்க்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். பொள்ளாச்சி, இராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி கோட்ட நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கத் தனியார் கம்பெனிக்குப் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். நெடுஞ்சாலைகளில் சுங்கவரி வசூலிக்கத் தனியாரை அனுமதிக்கக் கூடாது.

சாலைப் பணியாளர்களின் 41 மாதப் பணிக்காலத்தைப் பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் இந்தப் பிரச்சாரம் திங்கள் கிழமையன்று புதுக்கோட்டைக்கு வந்தது. பிரச்சாரப் பயணத்திற்குச் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் ஆர்.தமிழ் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் கோதண்டபாணி, மாவட்டச் செயலாளர் மாயழகு, பொருளாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் இந்தப் பயணக் குழுவில் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பிரச்சாரப் பயணத்தை அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் கே.நாகராஜன் வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், ஆலங்குடி, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை ஆகிய இடங்களிலும் இந்தப் பிரச்சாரம் நடைபெற்றது.

Leave A Reply