சென்னை,
நம்பிக்கை வாக்கெடுப்பு பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்று பேரவைச் செயலாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபாயில் தொடங்கி 6 கோடிரூபாய் வரை தருவதாக பேரம் பேசப்பட்டதாக அதிமுக மதுரை தெற்குதொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசியதாக வீடியோவை பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்று  ஜூன் 12ஆம் தேதி வெளியிட்டது. மேலும் அதிமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற மற்ற மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 10 கோடி ரூபாய் தரப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இதுதொடர்பாக சிபிஐ, வருமான புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு திங்களன்று (ஜூன் 19) நீதிபதிகள் சத்தியநாரயணன், சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த விவகாரம் தொடர்பாக  ஆதாரம் கொடுத்தும் சட்டப்பேரவையில் பேச அனுமதிக்காமல் வெளியேற்றப்பட்டதாகக் குற்றம்சாட்டினர்.

பேரவை செயலாளர் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர், மூல வழக்கிற்கும் தற்போது தொடரப்பட்ட கூடுதல் மனுவிற்கும் எந்தவித  தொடர்மில்லை. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி சிபிஐ விசாரணை கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்  என்றார்.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு  உகந்ததா என்பது தொடர்பாக பேரவைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave A Reply