தேங்காய்;                                                                                                  நீர் நிர்வாகம், உர நிர்வாகம், அத்தனையும் சரியாக இருக்க வேண்டும். வீரிய ஒட்டு ரகமானால் 300 முதல் 350 காய்களும், நெட்டை ரகமானால் சுமார் 100 முதல் 150 காய்களும் மகசூலாக கிடைக்கும். பராமரிப்பு குறைபாடு இருந்தால் நட்ட நன்றி கடனுக்காக காய்க்கும். பிஞ்சுகள் (குரும்பை) அதிகம் தங்கி குலைகுலையாய் தேங்காய் காய்க்க மகரந்த சேர்க்கை மிக முக்கியம்.

தென்னை மரங்களில் அயல் மகரந்த சேர்க்கையால் 96 விழுக்காடு கருவுறுதல் நிகழ்கிறது. தேனீக்களும், வண்ணத்து பூச்சிகளும் தேன் குடிக்க பூக்களில் உட்காரும்போது இயற்கையாக அயல் மகரந்த சேர்க்கை நிகழ்கிறது. தென்னை மரங்களில் தன் மகரந்த சேர்க்கை மிக குறைந்த அளவுதான் நடக்கிறது.

தென்னை மரங்களின் குருத்தை ஓட்டை இட்டு உள்ளே இருக்கும் சுவையான குருத்து பகுதியை கருப்பு கூன்வண்டு (காண்டாமிருக வண்டு) தின்றுவிடும். இலைகள் வளர்ந்து வரும்போது விசிறி போன்று தென்படும். காண்டாமிருக வண்டுகளின் கழுத்துப் பகுதியில் மணல் துகள்கள் விழுந்தால் செத்துவிடும். அந்த அடிப்படையில் மட்டை இடுக்குகளில் ஆற்று மணல் போட சிபாரிசு செய்யப்படுகிறது.

ஆனால் மணல் தூவிய தென்னை மரங்களையும் வண்டுகள் தாக்கியிருப்பதை பார்க்கலாம். மணல் பகுதிக்கு இரண்டு அங்குலத்திற்கு மேல் ஓட்டை இட்டு மணல் பகுதிக்கு தொடர்பில்லாமல் உள்பகுதி வழியாக குருத்துப் பகுதிக்குள் காண்டாமிருக வண்டுகள் சென்றிருப்பதை பார்க்க முடிகிறது.

அதனால் மணல் துகள்களால் வண்டுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. வண்டுகளை சாகடிக்க வேண்டும் என்கிற ஒரே சிந்தனையில் விஷத் தன்மையுள்ள பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிப்பதும், மணலுடன் கலந்து மட்டை இடுக்குகளில் பயன்படுத்துவதையும் பார்க்கலாம்.

இதனால் பூச்சி கொல்லி தெளித்த தென்னந் தோப்புகளில் வண்டுகள், தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள் அனைத்தும் செத்து கிடப்பதை பார்க்க முடிகிறது. வண்டு வரவு குறைந்து, தாக்குதலும் குறைகிறது. பூச்சி கொல்லி மருந்து தெளித்தால் நன்மை கிடைத்து விட்டதாக நினைக்கிறோம். ஆனால் நன்மை செய்த தேனீக்களும், வண்ணத்து பூச்சிகளும் சேர்ந்து செத்துவிடுகின்றன.

அல்லது தேனீக்கள் வேறு பக்கம் போய்விடுகின்றன.பூ,பிஞ்சு கொட்டுதல்: அடுத்து விரியும் பூங்கொத்துக்களில் பிஞ்சுகள் (குரும்பை) பிடிப்பின்றி கருகி , காயின்றி மரங்கள் நிற்பதை பார்க்கலாம். ஓரிரு பிஞ்சுகள் தங்குவது கூட, மலட்டு காயாக தென்படும்.

தேனீக்களின் பங்கு;
திருவையாற்றில் அமைந்துள்ள தென்னை ஆராய்ச்சி மையம் இது பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்ட போது தேனீக்கள், வண்ணத்து பூச்சிகள் மற்றும் வண்டுகள் தேன் குடிக்க மரத்துக்கு மரம் செல்லும்போது மகரந்த பொடி பரிமாற்றம் ஏற்பட்டு, அயல் மகரந்த சேர்க்கை மூலம் கருவுறுதல் நிகழ்ந்து குரும்பைகள் பிஞ்சாகிறது.

தேனீக்கள் ஒரு தென்னை மரத்தில் தேன் குடிக்கும்போது ஆண் பூக்களின் மகரந்த பொடி கால்களில் ஒட்டிக் கொள்கிறது. அடுத்த மரத்தில் தேன் குடிக்க செல்லும்போது தேனீக்களின் கால்களில் ஒட்டியிருந்த மகரந்த பொடி பெண் பூக்களின் சூல்முடியில் ஒட்டிக் கொள்வதால் தடையின்றி கருவுறுதல் நிகழ்கிறது. கருவுறுதல் சரியாக நடந்தால்தான் பூ, பிஞ்சாகி இளநீர், தேங்காய் கிடைக்கும். இதற்கு அயல் மகரந்த சேர்க்கை என்று பெயர். இது இயற்கையாக தினந்தோறும் நிகழும் நிகழ்ச்சியாகும்.

ஆனால், இலைகளை கத்தரிக்கும் வண்டுகளை தடுக்க மணலுடன் கலந்து பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால், மகசூல் பெருக உதவும் தென்னை மரங்களின் நண்பன் தேனீக்கள் செத்துவிடுகிறது. அல்லது அதன் வாடையால் தோப்புக்குள் வராமல் வேறு பக்கம் சென்றுவிடுகிறது.

இதனால் மகரந்த சேர்க்கை சரிவர நடக்காமல் கருவுறுதல் தடைபட்டு பூக்கள் மலடாகி கொட்டிவிடுகிறது. எனவே முற்றி வெறும் மட்டையாக மாறி விடும். பிஞ்சு, நல்ல காய்கள் இன்றி வெறுமையாக மட்டும் தென்படும். குருத்துப் பூச்சி மற்றும் வண்டு தடுப்புக்கு தெளித்த பூச்சி கொல்லி மருந்து வேறு விதமான பின் விளைவுகளை ஏற்படுத்தி மகசூல் இல்லாமல் ஆக்கிவிட்டது என்ற காரணம் புரியாமல் பலரும் மரத்தில் காயில்லை என்று வருத்தப்படுவதை பார்க்கலாம்.

பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதால் அதில் உள்ள மெர்குரி, ஆசிட்டின் தன்மையால் குருத்து அழுகிவிடும் நிலையும் ஏற்படுகிறது. நாம் செய்ய வேண்டியது என்ன? தென்னை மரங்கள் சுமார் நூறு வருடங்கள் வரை வாழ்ந்து பலன் தரக் கூடியது. அதற்கு ஆர்கானிக் வகை மருந்து உரங்களை பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. அந்த வகையில் கருப்பு கூன் வண்டு தடுப்புக்கு ஆர்கானிக் மருந்து பவுடர் மார்க்கெட்டில் கிடைக்கிறது.

பத்து கிராம் பவுடரை 250 மில்லி தண்ணீரில் நன்கு கரைத்து குருத்தில் நனையும்படி ஏற்றினால் கருப்பு கூன் வண்டு தாக்குதலை தடுக்க முடிகிறது. இது பற்றி திருவையாறில் உள்ள தென்னை ஆராய்ச்சி மையம் செய்த ஆராய்ச்சிகளில் நல்ல பயன் உள்ளதாக கண்டறியப்பட்டது.

அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவும் தேனீக்களுக்கும், வண்ணத்து பூச்சிகளுக்கும் எந்த வித பாதிப்பும் இந்த பவுடரால் ஏற்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. அதனால் காண்டாமிருக வண்டு தடுப்புக்கு பயன்படுத்த சிபாரிசு செய்யப்படுகிறது.

தேனீ பெட்டி அவசியம்:                                                                                                                                                                        தேனீக்கள் தினமும் 20 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தேன் சேகரிக்கிறது. பூ எங்கு பூக்கிறதோ, அங்கு இயற்கையாக தேனீக்கள் பறந்து வந்துவிடும். இதனால் வேளாண்மை உற்பத்திக்கு தேனீக்கள் பெரிதும் உதவுகிறது. மர பொந்துகளிலும், மண் புற்று, வளைகளிலும் இயற்கையாக தேனீக்கள் குடும்பமாக வளர்கின்றன. மர கிளைகளிலும், தென்னை மட்டைகளிலும் கூட தேன் அடை அமைத்து வாழ்வதைப் பார்க்கலாம்.

தென்னந் தோப்புகளில் தேனீ பெட்டிகள் வைத்து பராமரிப்பது நல்லது. நல்ல தேன் கிடைக்கும். குமரி மாவட்டத்திலும், கேரள மாநிலத்திலும் வியாபார ரீதியாக தேனீ வளர்க்கப்படுகிறது. ஆனால் நாம் வளர்க்கும் தேனீக்கள் நம் தென்னை மரங்களின் பூக்களில் தேன் குடித்து அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

பூ பூக்கும் இடம் தேடி சென்றுவிடும். தோப்புக்களில் தேனீ வளர்ப்பது சிறந்த சமூக சேவையாக கருதலாம். தோப்புக்களில் விஷ பூச்சிகொல்லியை பயன்படுத்தாமல் இருந்தால் தேனீக்கள் நம் தோப்புக்குள் தானாக குடி வந்து கூடு கட்டி வாழும். தோப்புக்குள் தேனீக்கள் பறந்து திரிந்தால் தேங்காய் மகசூல் பெருகும்.

Leave A Reply