கோயம்புத்தூர்;
வன்முறையை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும் பாஜகவிற்கு, மக்கள் போராட்டங்கள் மூலம் மார்க்சிஸ்ட் கட்சி பதிலடி கொடுக்கும் என டி.கே.ரங்கராஜன் எம்.பி. தெரிவித்தார்.

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் மீது கடந்த சனிக்கிழமை மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யபாரதி ஆகியோரை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பி.சம்பத் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து கேட்டறிந்தனர்.

அப்போது, குண்டு வீச்சுக்கு காரணமான சமூக விரோதிகள் மற்றும் அவர்களின் பின்னணி குறித்து விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; கட்சி அலுவலகங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

டி.கே.ரங்கராஜன்;                                                                                                                                                                        இதனைத்தொடர்ந்து மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறுகையில், கோவை மாவட்ட சிபிஎம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆத்திரத்தை தூண்டும் முயற்சியில் இந்துத்துவ அமைப்புகள் ஈடுபடுகின்றன என குற்றச்சாட்டினார். மேலும், இந்த குண்டுவீச்சு சம்பவத்தை கண்டித்து உடனடியாக கண்டன அறிக்கை வெளியிட்ட திமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து இயக்கங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் நலனுக்கு எதிரான சம்பவங்கள் நடை பெறும்போது இதுபோன்று அனைத்து இயக்கங்களும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.குண்டுவீச்சு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் திறமையின் மீதுஎங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

அதேநேரத்தில் காவல்துறையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பதும், காவலர்களுக்கு ஏற்படும் பணிச் சுமையால் திறன்பட செயலாற்ற முடியாத நிலையும் உள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

தமிழக அரசு உடனடியாக காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி இத்துறையை மேம்படுத்து வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் இந்துத்துவவாதிகள் இருக்கிறார்கள் என்று நாங்கள் சொல்வதற்கு காரணம், எங்களுக்கு நேர் எதிரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே என சமீபத்தில் பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷாவே வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் அவர் கேரளாவும், திரிபுராவும் அடுத்த எங்கள் இலக்கு என்று சொல்லியிருக்கிறார்.

இதன்காரண மாகவே திரிபுராவில் மலைவாழ் மக்க ளோடு இதர பிரிவினரை மோதவிட்டு பிரிவினையை உண்டாக்குகிறது பாஜக பரிவாரம். கேரள மாநிலம் கண்ணூரிலும் இதுபோன்ற வகுப்பு மோதலை உரு வாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட வேணுகோபால் கமிஷன் அறிக்கை இப்போதும் இருக்கிறது. இதில் ஆர்எஸ்எஸ் பரி
வாரங்கள் மேற்கொண்ட நடவடிக்கை கள் குறித்து எடுக்கப்பட்ட வாக்கு மூலங்களை கண்டாலே அவர்களது செயல் பாட்டை உணர்ந்து கொள்ள முடியும். ஆகவே, வன்முறையைத் தூண்டி விட்டு ஆதாயம் தேடும் கட்சி பாஜக.

பாஜகவிற்கு அதன் அரசியல் மீதும், தத்துவத்தின் மீதும் நம்பிக்கை இருந்தால் அதனை மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெறுவதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயத்தை தேடுகிற வேலையைத்தான் பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாகத் தான் கோவையில் இந்த குண்டு வீச்சு சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.

வன்முறையின் மீது நம்பிக்கை கொண்ட பாஜகவை, உழைப்பாளி வர்க்கத்தை திரட்டிப் போராட்டம் நடத்துகிற மார்க்சிஸ்ட்கள் மக்கள் போராட்டங்களின் மூலம் எதிர்கொள்வோம். மூன்றாண்டு பாஜகவின் ஆட்சியில் பாதிப்புக்குள்ளான அனைத்துத் தரப்பு மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவதே பாஜகவிற்கு நாங்கள் கொடுக்கும் பதிலடியாக இருக்கும்.

“பந்தை அடிக்க அடிக்கத்தான் உயரத்திற்கு எழும்பும். தீட்டத் தீட்டத்தான் வைரம் ஜொலிக்கும் என்பதைப்போல சவால்களை சந்திப்பது எப்படி என்பது கம்யூனிஸ்ட்டுகளுக்குத் தெரியும்” எனவும் டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார்.

ஜிஎஸ்டியால் கடும் ஆபத்து;
ஜிஎஸ்டி வரிக்கொள்கையால் வர்த்தகர்கள், வியாபாரிகள், கைத்தறி, விசைத்தறி, பஞ்சாலைகள், கிரைண்டர், மோட்டார் தொழில்கள் என பெரும் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட பின்னர் பாதிப்பு இன்னும் அதிகமாகும், மேலும், விலைவாசி கடுமையாக உயரும் இதிலிருந்து மக்களை காக்க மத்திய அரசிற்கு எதிராக கடுமையான போராட்டங்களை மக்க ளை திரட்டி மேற்கொள்வோம் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழகத்தில் ஆட்சி நடை பெறுகின்றதா என்பதே சந்தேகமாக இருக்கின்றது. தமிழக சட்டமன்றத்தில் இடதுசாரிகள் இல்லை என்ற வருத்தம் இப்போதுதான் பலருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார்.

ஐனாதிபதி தேர்தலுக்கு பின்னர் எது போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம் எனவும், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply