திருப்பூர், ஜூன் 19 –
திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு சட்டப்படி வேலைநேரம் உள்ளிட்ட சட்ட உரிமைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் தொழிலாளர் துறை உயர் அதிகாரிகளை திருப்பூர் அனைத்து தொழிற்சங்கத்தினர் மனு அளித்தனர். திருப்பூர் பனியன் தொழிலைச் சேர்ந்த சிஐடியு பொதுச் செயலாளர் ஜி.சம்பத், ஏஐடியுசி செயலாளர் என்.சேகர், எல்பிஎப் தலைவர் க.ராமகிருஷ்ணன், ஏடிபி செயலாளர் குணசேகரன், ஐஎன்டியுசி செயலாளர் அ.சிவசாமி, எச்எம்எஸ் செயலாளர் முத்துசாமி, எம்எல்எப் நிர்வாகி மனோகரன், பிஎம்எஸ் நிர்வாகி சந்தானகிருஷ்ணன் ஆகியோர் திங்களன்று சென்னைக்குச் சென்று தொழிலாளர்துறை செயலாளர் அமுதா, தொழிலாளர்துறை ஆணையர்பாலச்சந்திரன் ஆகிய உயர் அதிகாரிகளைச் சந்தித்து 11 அம்சக் கோரிக்
கைகளை நிறைவேற்றக் கோரி மனு அளித்தனர்.

ஏற்கெனவே இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்த நிலையில், பல நிறுவனங்களில் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை சட்டங்களை முறையாக அமலாக்காத நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே இவ்விசயத்தில் மாநில அரசு நேரடியாகத் தலையிட்டு தொழிலாளர்களுக்கான சட்ட உரிமைகளை அமல்படுத்துவதை உறுதிப்படுத்தக் கோரி தொழிற்சங்கத் தலைவர்கள் மனு அளித்தனர். குறிப்பாக சட்டப்படி 8 மணி நேர வேலையுடன், மிகைநேர வேலை வாங்குவதிலும் சட்ட நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.

இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும், வார விடுமுறை மற்றும் தேசிய, பண்டிகை தினவிடுமுறைகளை முறையாக வழங்குவதுடன், அன்றைய தினம் வேலை வாங்கக் கூடாது, பெண் தொழிலாளர் பாலியல் புகார்கள் குறித்து கம்பெனியளவில் புகார் கமிட்டிகள் வைக்க வேண்டும், ஒப்பந்தத்தொழிலாளர் முறையை ரத்து செய்வதுடன், பீஸ் ரேட் தொழிலாளர்களுக்கும் சட்டரீதியான அனைத்து உரிமைகளையும் அமல்படுத்த வேண்டும், வெளி மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்கு 1979 சட்ட நடைமுறைகளை அமலாக்க வேண்டும் என்றும் அவர்கள் செயலர் அமுதா, ஆணையர் பாலச்சந்திரன் ஆகியோரிடம் வலியுறுத்தினர்.

இவர்களது கோரிக்கைகள் குறித்து கவனமாகக் கேட்டறிந்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக சிஐடியு பனியன் பொதுத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் கூறினார்.

Leave A Reply